இளவலும் இறைவனும்- இளவலாகிய இலக்குவனும், இறைவனாகிய இராமபிரானும்; இலங்கை வேந்தனும்- இலங்கை வேந்தனாக இராமபிரானால் முடிசூடப் பெற்ற வீடணனும்; அளவறு நம் குலத்து அரசும்- அளவற்றவர்களான வானர குலத்தவர்களின் வேந்தனான சுக்கிரீவனும்; அல்லவர்- அல்லாத மற்ற எல்லோரும்; வளைதரு கருங்கடல் அடைக்க வம் என- இலங்கையைச் சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் கரிய கடலை அடைத்து அணை கட்ட வாருங்கள் என்று; தளம் மலி சேனையை- நிறைந்த கூட்டத்தினரான வானரப் படையினரை; சாம்பன் சாற்றினான்- சாம்பவந்தன் கூறி அழைக்கலானான். |
வம் - வாருங்கள் சாம்பன் சாற்றினான் என்பதால் பறை அறைந்து தெரிவித்தான் என்பது பொருந்தும். தளம் - கூட்டம். |
(4) |
வானர சேனை மலைகளைக் கொணர்தல் |
6678. | கரு வரை காதங்கள் கணக்கு இலாதன |
| இரு கையில், தோள்களில், சென்னி, ஏந்தின, |
| ஒரு கடல் அடைக்க மற்று ஒழிந்த வேலைகள் |
| வருவன ஆம் என, வந்த வானரம். |
|
கருவரை காதங்கள் கணக்கு இலாதன- கணக்கில்லாத பல காத தூரம் பரவியுள்ள கரிய மலைகளையெல்லாம்; இரு கையில் தோள்களில் சென்னி ஏந்தின- இரண்டு கைகளிலும், இரண்டு தோள்களிலும், தலையிலும் ஏந்தியனவாக; ஒரு கடல் அடைக்க- ஒரு கடலை அடைத்து அணை கட்டுவதற்காக; மற்று ஒழிந்த வேலைகள் வருவனவாம் என- மற்றுள்ள ஆறு கடல்களும் வருவனபோல்; வானரம் வந்த- வானரப் படைகள் வந்தன. |
கருவரை - கருமை நிறமான மலைகள். 'ஏந்தின வந்த' என இயையும், வந்த - வந்தன வருவனவாம் என - வருவன போல. மற்று - அசை. ஏந்தின - முற்றெச்சம். |
(5) |
6679. | பேர்த்தன மலை சில; பேர்க்கப் பேர்க்க, நின்று |
| ஈர்த்தன சில; சில சென்னி ஏந்தின; |
| தூர்த்தன சில; சில தூர்க்கத் தூர்க்க நின்று |
| ஆர்த்தன; சில சில ஆடிப் பாடின. |