பக்கம் எண் :

398யுத்த காண்டம் 

நளன் எனும் நவையின்  நீங்கினான்-  நளன்  என்னும்
பெயருடைய  குற்றமற்றவனாகிய  வானரத்தச்சன்;  முடுக்கினன்
'தருக'  என
- 'மலைகளைத்  தருக' என்று  கூறி  வானரங்களை
விரட்டினான்;  மூன்று  கோடிய  எடுக்கினும்-  மூன்று கோடி
வானரங்கள்  மலைகளை  எடுத்துக்  கொடுத்தாலும்; அம்மலை
ஒருகை ஏந்தியிட்டு அடுக்கினன்
- அந்த மலைகளை எல்லாம்
தனது ஒருகையினால் வாங்கி, அடுக்கினான்; தன்  வலி காட்டி-
தனது வலிமைகாட்டி; ஆழியை   நடுக்கினன்-   அக்கடலை
நடுங்கும்படி செய்தான்.
 

மூன்று   கோடி   வானரங்கள்   மலைகளை எடுத்து வந்து
கொடுத்தாலும், அம்  மலைகளைத் தனது  ஒரு கையால்  ஏந்தி
அடுக்கிவிட்டு,  'மலைகளைக்  கொடுங்கள்' என்று வானரங்களை
விரட்டினான்.  தனது  வல்லமையைக்  காட்டி,   அக்கடலையே
நடுங்கும் படி செய்தான். நளனது ஒப்பற்ற ஆற்றலைக் கூறுவதிது.
அவனது  சிறப்புத் தோன்ற 'நளன் எனும் நவையின் நீங்கினான்"
என்றார்.  நவை - குற்றம். பெரிய  மலைகளைக் கடலில்  இடும்
போது,  தண்ணீர்  பொங்கி  அலைஎழுவது  கடல்  நடுங்குவது
போலிருந்தது  என்பதால்   'ஆழியை    நடுக்கினன்'  என்றார்.
முடுக்குதல் - விரட்டுதல்.   கோடிக்  கணக்கான   வானரங்கள்
கொணர்ந்து  கொட்டிய  மலைகளை  நளன் ஒருவனே தச்சனாக
அமைந்து   விரைவாகக்  கட்டியதோடன்றி,  மேன்மேலும்  கல்
கொணர்க என வானரங்களை விரட்டினான் என்பதாம்.
 

(8)
 

6682.

மஞ்சினில் திகழ்தரும் மலையை, மாக் குரங்கு,
எஞ்சுறக் கடிது எடுத்து எறியவே, நளன்
விஞ்சையில் தாங்கினன்-சடையன் வெண்ணையில்,
'தஞ்சம்!' என்றோர்களைத் தாங்கும் தன்மைபோல்.
 

மஞ்சினில் திகழ் தரும் மலையை- மேக மண்டலம் வரை
உயர்ந்து    திகழும்   மலைகளை;   மாக்குரங்கு   எஞ்சுறக்
கடிதெடுத்து  எறியவே
- பெரிய  குரங்குகள்  விரைந்து எடுத்து
வந்து எறிய;  (அவைகளை) நளன்  விஞ்சையில் தாங்கினன்-
நளன் தான் கற்ற விஞ்சையினாலே தான்  ஒருவனே தாங்கினான்;
சடையன் வெண்ணையில்- திரு வெண்ணய் நல்லூரில் வாழ்ந்த
சடையப்ப வள்ளல்; தஞ்சம்  என்றோர்களை-  அடைக்கலம்
என்று தன்னை  நாடி  வந்தவர்களை; தாங்கும் தன்மை போல்-
தாங்கி   ஆதரிக்கும்  தன்மையைப் போல (நளன்   மலைகளைத்
தாங்கினான்).