பக்கம் எண் :

400யுத்த காண்டம் 

நீரிடை நிமிர் பொறி பிறக்க, 'நீண்ட ஈது
ஆருடை நெருப்பு?' என வருணன் அஞ்சினான்.
 

வேருடை நெடுங்கிரிதலைவர் வீசின - வானரப் படையின்
தலைவர்கள்  பறித்துக்   கடலில்  எறிந்த அடியோடு பெயர்த்து
வீசப்பட்ட மலைகளெல்லாம்; ஓரிடத்து ஒன்றின் மேல் ஒன்று
- ஒரே   இடத்தில்  ஒன்றின்மீது   மற்றொன்றாக; சென்று உக-
சென்று வீழ்ந்ததால்; நீரிடை நிமிர் பொறி பிறக்க- கடல் நீரின்
மீது  உயர்ந்த  தீப்பொறி  பிறந்ததால்; நீண்ட  ஈது  ஆருடை
நெருப்பு என
-கடல் மீது நீண்டெரியுமிந்த நெருப்பு யாருண்டாகச்
செய்ததென்று; வருணன் அஞ்சினான்-  கடலரசனான வருணன்
மிகவும் பயந்தான்.
 

நிமிர் - நீண்ட பொறி - தீப்பொறி. ஏற்கனவே இராமபிரானது
அம்புகள் நெருப்பை உமிழ்ந்த துன்பத்தைத் துய்த்தவன் வருணன்.
இராமனை அடைக்கலம்  அடைந்ததால்  அவன்  சினம் தணிந்து
நின்றான்.  'இப்போது  நீரிடையே நெருப்புத் தோன்றுகிறதே  இது
வேறுயாருடைய  செயலாகும்'  என்பான்  'நீண்ட  ஈது  ஆருடை
நெருப்பு'  என்று  கேட்டு, அஞ்சலாயினான்.  அடைக்கலம் தந்து
ஆதரித்த இராமபிரானது  நெருப்பாக இருக்க இயலாது என்பதால்
'ஈது ஆருடை நெருப்பு' என்றான். 
 

(11)
 

6685.

ஆனிறக்கண்ணன் என்று ஒருவன், அங்கையால்,
கான் இற மலை கொணர்ந்து எறிய, கார்க் கடல்
தூ நிற முத்துஇனம் துவலையோடும் போய்,
வான் நிறை மீனொடு மாறு கொண்டவே.
 

ஆனிறக் கண்ணன் என்று ஒருவன்- ஆனிறக் கண்ணன்
(கவயாட்சன்)  என்ற   பெயர் கொண்ட ஒருவானரத் தலைவன்;
அங்கையால் கான் இறமலை  கொணர்ந்து   எறிய- தனது
உள்ளங்கையால் காடுகள் அழியுமாறு மலையைக் கொண்டு வந்து
கடலில்  எறிய; கார்க்கடல்  தூநிற   முத்து  இனம்- கரிய
கடலிலுள்ள   தூய     நிறத்தைஉடைய    முத்துக்களெல்லாம்;
துவலையோடு  போய்-  கடலில்   மலை   விழலால்  எழுந்த
நீர்த்திவலைகளோடு   சென்று;   வான்   நிறை    மீனொடு-
வானத்திலே நிறைந்துள்ள விண்மீன்களோடு; மாறு கொண்டவே-
மாறுபாடு கொண்டு தோன்றுவனவாயின.