'கவயாட்சன்' என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கமே ஆனிறக் கண்ணன். மலையின் மீதுள்ள காடுகளெல்லாம் மலையைப் பறித்தெடுக்க அழிதலால் 'கான் இற' என்றார். கடலில் மலை விழுதலால் எழுந்த நீர்த்திவலை (துளி)களோடு, முத்துக்களும் வானிலே சென்று பொருந்தின விண்மீன்களும், முத்துக்களும், ஒன்றுடன் ஒன்று 'மாறு கொண்டு தோன்றின 'என்றார். கார்க்கடல் - கருமை நிறமான கடல். தூநிறம் - தூய்மையான நிறம். முத்துக்களும், விண்மீன்களும் ஒளியாலும் தோற்றத்தாலும் ஒத்துக் காணப்படுவதால் 'மாறு கொண்டவே' என்றார். |
(12) |
6686. | சிந்துரத் தட வரை எறிய, சேணிடை |
| முந்துறத் தெறித்து எழு முத்தம் தொத்தலால், |
| அந்தரத்து எழு முகில் ஆடையா, அகன் |
| பந்தர் ஒத்தது, நெடும் பருதி வானமே. |
|
சிந்துரத் தடவரை எறிய- யானைகளை உடைய பெரிய மலைகளை வானர வீரர்கள் கடலில் எறிவதால்; சேணிடை முந்துற- நீண்ட தொலையுள்ள வானத்திலே முன்பே; தெறித்து எழு முத்தம் தொத்தலால்- தெறித் தெழுந்த முத்துக்கள் தம்மீது தொத்திக் கொள்வதால்; அந்தரத்து ஏழு முகில் ஆடையா- ஆகாயத்திலே எழுந்த மேகங்களே ஆடையாக; நெடும்பருதி வானம் - பெரிய சூரியனை உடைய வானம்; அகன் பந்தர் ஒத்தது- அகன்ற பந்தலைப் போலக் காணப்பட்டது. |
சிந்துரம் - யானை. வானம் பந்தரையும், முகில் பந்தருக்குக் கட்டும் மேற்கட்டியான விதானத்தையும், மேகத்திலே தொத்திய முத்துக்கள் விதானத்தில் தொங்க விடும் முத்துச் சரத்தையும் போன்று காணப்பட்டன. நீலப்பட்டாடைக்கு மேலே ஒளி விடும் விளக்கை ஒத்துச் சூரியன் விளங்கினான் என்பதை 'நெடும் பருதி வானம்' என்பது குறிக்கும். |
(13) |
6687. | வேணுவின் நெடு வரை வீச, மீமிசைச் |
| சேண் உறு திவலையால் நனைந்த செந் துகில், |
| பூண் உறும் அல்குலில் பொருந்திப் போதலால், |
| நாணினர், வான நாட்டு உறையும் நங்கைமார். |
|
வேணுவின் நெடுவரை வீச- வானர வீரர்கள் மூங்கில் வளர்ந்துள்ள பெரிய மலைகளைக் கடலின் மீது எறிதலால்; மீமிசை சேண் உறுதிவலையால்- மேலே எழுந்த விண்ணாட்டில் |