பக்கம் எண் :

402யுத்த காண்டம் 

தெறித்த  நீர்த்  துளிகளால்; நனைந்த  செந்துகில்-  நனைந்து
போன  செம்மை  நிறப்பட்டாடை;   பூண்  உறும்  அல்குலில்-
மேகலாபரணம்  பொருந்திய   தமது  அல்குலிலே; பொருந்திப்
போதலால்
- சேர்ந்து ஒட்டிக் கொண்டதால்; வான நாட்டுறையும்
நங்கை  மார் நாணினர்
-  வான நாட்டிலே வாழும் மகளிர் மிக்க
நாணமுற்றனர்.
 

வேணு - மூங்கில், செந்துகில் - செம்பட்டாடை தேவமாதர்கள்
செம்பட்டாடை    அணிவர்.   மென்மையான   பட்டாடை   மீது,
நீர்த்துளிகள்  விழுவதால் அந்த   ஆடை   உடம்போடு  ஒட்டிக்
கொள்வது இயல்பு. பெரிய  மலைகளை  வானர  வீரர்  வீசுவதால்,
மிக உயர  மாயுள்ள விண்ணுலகத்திலே அத்துளிகள் வீழ. அதனால்
செம்பட்டாடை  நனைந்து    உடம்போடு    ஒட்டிக்    கொள்ள,
உள்ளுறுப்பு வெளியே தெரியலாயிற்றே என, நாணினர்  என்க, இது
போன்று (கம்ப. 2358) முன்னும் கூறியதை நினைவு கூர்க.
 

(14)
 

6688.

தேன் இவர் தட வரை, திரைக் கருங் கடல்-
தான் நிமிர்தர, இடை குவியத் தள்ளும் நீர்-
மேல் நிமிர் திவலை மீச் சென்று மீடலால்,
வானவர் நாட்டினும் மழை பொழிந்தவால்.
 

தேன் இவர் தடவரை- தேன் பொருந்திய பெரிய மலைகள்;
திரைக்   கருங்கடல்தான்   நிமிர்தர-  அலைகளை உடைய
கரியகடல்  மேலோங்கும்படி; இடை  குவியத்  தள்ளும் நீர்-
(வானரங்களால்  வீசப்பட்டு)  அக்கடலுக்கு இடையே குவிதலால்
தள்ளப்பட்ட கடல் நீரிலிருந்து; மேல்  நிமிர் திவலை-  மேலே
உயர்ந்து   சென்ற   நீர்த்திவலைகள்;   மீச்சென்று  மீடலால்-
விண்ணுலகத்துக்கும் மேலே சென்று அங்கு வீழ்தலால்; வானவர்
நாட்டினும்  மழை  பொழிந்தவால்
- தேவருலகத்திலும்  மழை
பொழிந்தது போலிருந்தது.
 

மீச் சென்று - மேலே சென்று. மீடலால் - மீள்தலால் நிமிர்தர
- மேலோங்கும்படி தடவரை இடைகுவிய என இயையும்.
 

(15)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

6689.

மை உறு மலைகளோடும் மறி கடல் வந்து வீழ்ந்த,
வெய்ய வாய் மகரம் பற்ற வெருவின விளிப்ப,-

மேல்நாள்,