பக்கம் எண் :

15   யுத்த காண்டம்

ஏனைய  மனிதர்களையும்    காக்க    வேண்டிச்   செய்யப்பட்ட
போர்களே  ஆகும். எனவே, வன்முறை தவிர்ப்பது என்பது வேறு.
அறத்திற்காகப்  போராடுவது என்பது வேறு. அன்றியும்  சமுதாயத்
தலைவனாகவும்,  அரசனாகவும் இருப்பவனுக்குச் சில   தனிப்பட்ட
கடமைகள் உண்டு. அறத்தையும், நீதியையும்    நிலைநாட்டத் தனி
ஒருவனையோ அல்லது ஒரு கூட்டத்தையோ போரிட்டுக் கொல்வது
அரசனுடைய கடமையாகும் . இதன் அற அடிப்படையைக் கூறவந்த
வள்ளுவர்,
 

'கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்'

(குறள் - 550)

என்றார்.
 

எனவே, பிறர் துயர் துடைக்க இராமன் செய்த போர் வன்முறை
அன்று என்பதனை மனத்தில்   கொள்ள   வேண்டும். வன்முறைக்கு
அறத்தின் உதவி கிட்டாது என்பதனையும் அறிதல் வேண்டும்.
 

வளர்ந்துவரும்    சோழப்    பேரரசுக்கு -  போர்புரிந்து, தன்
நாட்டை விரிவுபடுத்த வேண்டிய சோழப் பேரரசுக்கு - சாளுக்கியர்,
இலங்கையர்    என்ற    தென் வட எல்லைகளில்  பகைவர்களால்
சூழப்பட்ட    சோழப்    பேரரசுக்கு   மிக  இன்றியமையாததாகிய
போர்பற்றிக்     கூற வேண்டும்   என்று  நினைக்கிறான்   கம்பன்.
விஜயாலயன், பராந்தகன்   காலத்தில்,     பரஞ்சோதியார்  போன்ற
போர்த்தலைமை பூணும்   வீரர்கள் யாரும் இல்லை. அப்படிப்பட்ட
நிலையில், போர்  என்றால்   என்ன, அதை எதற்காக, எப்பொழுது,
எந்த முறையில்   மேற்கொள்ள     வேண்டும், போர் நடக்கையில்,
கைக்கொள்ள   வேண்டிய      செயல்      முறைகள்    யாவை -
என்பவற்றையெல்லாம்    இராமகாதையை அடித்தளமாகக் கொண்டு
விளக்க முற்படுகின்றான் கம்பன். போர்த் தந்திரங்கள்பற்றி, இவ்வளவு
விரிவாகப்  பாடுவதற்கு அவன் யாரிடம் இக்கலை பயின்றான் என்று
தெரியவில்லை    என்றாலும்,      போரின்   அடிப்படை அறமாக
இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தத் தவறவில்லை.
 

சிலம்பு, சிந்தாமணி, உதயணன் கதை என்பவற்றில், போர் பற்றிய
செய்திகள்   உளவேனும்,    கம்பநாடனுடைய  யுத்த காண்டத்திற்கு
அவை ஈடு இணையாக மாட்டா.