சந்திரனுடைய கிரணங்களைப் போல; குளிர் வாய்ந்தன - குளிர்ந்த தன்மை பொருந்தியனவாயின; |
எப்போதும் நீர்த்திவலைகள் வானத் தெய்தினமையின் 'நிரந்தரம் எய்தலால்' என்றார். |
(62) |
6736. | நன்கு ஒடித்து, நறுங் கிரி சிந்திய |
| பொன் கொடித் துவலைப் பொதிந்து ஓடுவ, |
| வன் கொடிப் பவளங்கள் வயங்கலால், |
| மின் பொடித்தது போன்றன, விண் எலாம். |
|
நறுங்கிரி நன்கு ஒடித்து - மணம் மிகுந்த மலைகளை நன்றாகப் பெயர்த்து; சிந்திய பொன் கொடி- (கடலில் எறியும் போது சிந்திய மலையிலுள்ள பொன் துகள்களின் வரிசை; துவலை பொதிந்து ஓடுவ - கடலின் நீர்த்திவலைகளாலே பொதியப்பட்டு மேலே செல்வன; வன் கொடிப் பவளங்கள் வயங்கலால் - வலிய பவளக் கொடிகளோடு விளங்குவதால்; விண் எலாம் மின்பொடித்தது போன்றன - ஆகாய மெல்லாம் மின்னலைத் தோன்றச் செய்வது போன்றிருந்தது. |
நல்ல மணமுடைய ஏலம், கிராம்பு போன்ற மலைபடு பொருள்களால் மலை நறுமணம் கமழும் தன்மையுடையதாயிருத்தலின் 'நறுங்கிரி' என்றார். ஒடித்து - பெயர்த்து. பொன் கொடி - பொன் துகள்களின் ஒழுங்கு. பொதிந்து - மூடப்பட்டு. பொடித்தல் - தோன்றுதல். |
(63) |
6737. | ஓடும் ஓட்டரின், ஒன்றின் முன் ஒன்று போய், |
| காடும் நாடும், மரங்களும் கற்களும், |
| நாடும்; நாட்டும்; நளிர் கடல் நாட்டில், ஓர் |
| பூடும் ஆட்டல் இலாய, இப் பூமியில். |
|
ஓடும் ஓட்டரின் - விரைந்தோடும் தூதுவர்களைப் போல; ஒன்றின் முன் ஒன்று போய் - வானரங்களை ஒன்றையொன்று முந்திச் சென்று; காடும் நாடும்- காடாகிய முல்லை நிலத்தும், நாடாகிய மருத நிலத்தும்; மரங்களும் கற்களும் நாடும் - மரங்களையும் கற்களையும் தேடும்; நளிர்கடல் நாட்டில் நாட்டும்- (தேடிக் கொண்டு வந்தவைகளை கடல் நிலமான நெய்தல் நிலத்தில் நிலை நிறுத்தும்; இப்பூமியில்- இந்தப் பூமியிலே எங்கும்; |