பக்கம் எண் :

 சேது பந்தனப் படலம் 431

ஆரவாரமுழக்கத்தால்; விசும்பு பிளந்தது- வானமே இரண்டாகப்
பிளந்து   போயிற்று;   மற்று   இவ்வானம்  -  இப்போதுள்ள
இந்தவானம்; பிறிது  ஒருவான் கொலோ-  புதிதாக உண்டான
வேறு ஒருவானம்தானோ.
 

ஓங்கல் - மலை (இங்கு திரிகூட மலையை உணர்த்தும்). முற்ற
- நெருங்க  (அடைய), மூன்று பகல் - மூன்று நாட்கள். உற்றது -
தகுந்தது,  பொருத்தமானது.  வானம்  பிளந்து  போயிற்றென்றால்
இப்போதும்  வானம்  இருக்கிறதே  என  வினவுவார்க்கு  விடை
கூறுதல்  போல, 'ஒருவேளை  இது வேறு ஒரு வானமோ' என்பார்
'பிறிது   ஒரு   வான்  கொலோ'  என்றார்.  வான்மீகி   முனிவர்
அணை  ஐந்து   நாட்களில்   கட்டி   முடிக்கப்பட்டது   என்று
குறிப்பிட,  கம்பர்  மூன்று  நாட்களில்  கட்டி  முடிக்கப்  பட்டது
என்றார்.
 

(66)
 

சேதுவின் தோற்றம்
 

6740.

நாடுகின்றது என், வேறு ஒன்று?-நாயகன்
தோடு சேர் குழலாள் துயர் நீக்குவான்,
'ஓடும், என் முதுகிட்டு' என, ஓங்கிய
சேடன் என்னப் பொலிந்தது, சேதுவே!
 

நாயகன்- எல்லாவுயிர்களுக்கும்  தலைவனான இராமபிரான்;
தோடு சேர் குழலாள் - பூவிதழ்களைச் சூடிய கூந்தலை உடைய
சீதாபிராட்டியின்;  துயர்  நீக்குவான்- துயரத்தைத் தீர்ப்பதற்கு;
நாடு  கின்ற  தென் வேறு ஒன்று - அப்பெருமானுக்கு ஏவல்
பூண்டொழுகும்  நான்  இருக்க  வேறு  ஒன்றினை  ஏன் அவன் 
நாடவேண்டும்; ஓடும் என்முதுகு இட்டு என- எனது முதுகின் 
மீது  அடியிட்டு  இராமபிரான்  விரைந்து  செல்லட்டும்  என்று;
ஓங்கிய  சேடன்  என்ன  -  கடலின்மீது உயர்ந்து விளங்கிய
ஆதிசேடனைப்  போல; சேது பொலிந்தது  -  அந்த அணை
பொலிவு பெற்று விளங்கியது.
 

முதுகு  இட்டு - முதுகில்  அடியிட்டு. 'சென்றால் குடையாம்
இருந்தால்  சிங்காதனமாம்  நின்றால்  மரவடியாம்  நீள் கடலுள்
என்றும்  புணையாம்   மணி   விளக்காம்   பூம்பட்டாம்புல்கும்
அணையாம்  திருமாற்கு அரவு" என்ற  முதல்  திருவந்தாதி (53)
நினைவு கூரத்தக்கது.
 

(67)