8. ஒற்றுக் கேள்விப் படலம் |
சேது சமைத்த வானர வீரர்கள் பெருமானிடம் அதனைக் காட்டினர். அதன் வழி இலங்கைக்குக் கடல் கடந்து சென்ற படைகளுடன் சுவேல மலையில் தங்கிய இராமபிரான் படை வீடு அமைக்கப் பணித்தான். நளன் படைவீடுகளைப் பாங்குற அமைத்தான். படை வீட்டில் ஒற்றறிய வந்த இராவணனின் ஒற்றர்கள் வீடணனால் பிடிபட்டனர். இராமன் அபயம் அளித்து உண்மையை உரைக்குமாறு கூற, அவர்கள் உண்மையை ஒப்பினர். 'தேவியை விடுத்தால் இராவணன் ஆவியுண்டு என அறைக எனக் கூறி ஒற்றர்களைப் பெருமான் விடுவித்தருள, அவர்கள் இலங்கை திரும்பினர். இலங்கையில் அப்போது மந்திராலோசனைக் கூட்டம் நிகழ்கிறது. மனிதர் மிக நெருங்கி வந்துவிட்டனர். துணியும் காரியம் பற்றி இராவணன் கேட்க, மாலியவான் அறம் உரைக்கின்றான். அப்போது, ஒற்றர்கள் நுழைந்து, வானரப் படையின் பெருமையையும், இராமபிரானின் ஆற்றலையும் கருணையையும், அவன் உரைத்த சூளுரையினையும் தெளிய உரைத்தனர். |
மீண்டும் மாலியவான் இராமன் வந்துள்ள அவதார நோக்கினையும், அறங் காக்க உள்ளதையும் எடுத்துரைத்தான். அத்தனை வார்த்தைகளும் விழலுக்கு நீராய் வீணாகிப் போயின. இச்செய்திகள் இப்படலத்தில் கூறப்படுகின்றன. |
இராமன் சேது காணச் செல்லுதல் |
கலிவிருத்தம் |
6746. | ஆண்தகையும், அன்பினொடு, காதல்அமிழ்து ஊற |
| நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி, |
| 'ஈண்ட எழுக' என்றனன்-இழைத்த படி எல்லாம் |
| காண்டல்அதன்மேல் நெடிய காதல் முதிர்கின்றான். |
|
ஆண்தகையும் - ஆண்மைக்குரிய பண்பெலாம் அமைந்த இராமபிரானும்; காதல் அமிழ்து ஊற- பேரன்பு எனும் பெறலரும் அமிழ்தம் ஊற்றாய்ச் சுரக்க; அவரை - (சேதுவைச் சமைத்து விட்ட நற் செய்தியை வந்து கூறிய) அந்தச் சுக்கிரீவன் முதலானோரை; நெஞ்சினொடு நீண்ட கையினால் அன்பினொடு புல்லி- நெஞ்சாரத் |