தன்னுடைய நீண்ட (தாள்தோய் தடக்) கைகளால் அன்புமிக ஆரத்தழுவி; இழைத்த படி எல்லாம்- சேதுவைச் சமைத்துள்ள திறனையெல்லாம்; காண்டல் அதன் மேல்- காண்பதின் மேலே; நெடிய காதல் முதிர்கின்றான் - ஆசை மிக உற்றவனாய் (சேதுவைக்காண) எல்லோரும் விரைந்து எழுவீர்களாக;என்றனன் - என்று கூறினான். |
ஈண்ட - விரைய. 'இடுக்கண் களைதற்கு ஈண்டெனப் போகி' (சிலப். 13.101) எனச் சிலம்பிலும் காணலாம். அமிழ்து உயிர் தளிர்ப்பச் செய்து, சாவாமைக்குக் காரணம் ஆவது போல், காதல் அன்பும் ஆவதால், "காதல் அமிழ்துஊற" என்றார். மூன்று நாளில் கடலுக்கு அணை கட்டி முடிக்கப்பட்டது (6739) செயற்கருஞ்செயல் ஆதலின் இராமபிரான் பாராட்டுகிறான். |
(1) |
6747. | பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும் |
| கொண்டல் என வந்து அவ் அணையைக் குறுகி |
| நின்றான்- |
| அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளைக் |
| கண்டனன் எனப் பெரிய காதல் முதிர்கின்றான். |
|
அண்ட முதல்வன் - உலகம் யாவுக்கும் முதல்வனாகிய இராமபிரான்; பண்டை உறையுட்கு எதிர் - (தனது) பழைய வாழிடமான கடலுக்கு எதிராக; படைக்கடலின் வைகும் கொண்டல் என வந்து - தனது வானர சேனையாகிய கடலின்மேல் (வந்து) படியும் மேகம் எனும்படி வந்து; அவ்அணையைக் குறுகி நின்றான்- அந்த அணையைக் கிட்டி நின்று; ஒரு தன் ஆவி அனையாளை- ஒப்பற்ற தன் உயிர் போன்றவளான பிராட்டியை; கண்டனன் என - நேரிற் கண்டுவிட்டவனைப் போன்று; பெரிய காதல் முதிர்கின்றான் - மிகுந்த காதல் முற்றியவன் ஆனான். |
அண்ட முதல்வன் - உலகங்கட்கு எல்லாம் முதல்வன். 'ஆதி பகவன் முதற்றே உலகு" (குறள். 1) என்பார் வள்ளுவர்."ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை" (4025) என்று, முன்னரும் சீதையைக் குறித்தது நினைக. மேகம் கடலிடை நீருண்ணக் கவியும் என்பது மரபு. "கருணையம் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி" (கம்ப. 6593) என்பார் வருணனை வழி வேண்டு படலத்திலும். "கடல் தன்னைப் போர அளவு உடைத்தாக நினைத்திருக்குமாயிற்று; அதற்காக, ஒரு கடல் ஒருகடலோடே பொறாமை கொண்டு கிடந்தாற் போலே இருக்கை; "கருணையம் கடல் துயின்றனன் கருங்கடல் நோக்கி" என்னும்படி |