பக்கம் எண் :

 ஒற்றுக் கேள்விப் படலம் 439

இரும் கவிகொள் சேனை- பெருந்திரளான வானரங்களைக்
கொண்ட  சேனைகள்;  மணிஆரம்  இடறி - நவமணிகளையும்,
சந்தனக் கட்டைகளையும் இடறுமாறு;தன் மருங்கு வளர்- தனது
பக்கங்களிலே  உயர்கின்ற;  தெண்டிரை - தெள்ளிய அலைகள்;
வயங்கு  பொழில்   மான  -  விளங்குகின்ற  சோலைகளை
ஒத்திருப்ப; கருங்கடல் புக- கரிய கடலிலே சென்று வீழுமாறு;
பெருகு  காவிரி  கடுப்ப  - பெருகுகின்ற  காவிரியாற்றினைப்
போன்று; உயர்ந்த  கரை  யூடே-  உயர்ந்து  நின்ற அந்த
அணையின் வழியாக; நனி போயின - மிக ஒன்றாக (நெருங்கிச்)
சென்றன.
 

இருமருங்கும் கடல் அலைகள் ஓங்கியெழ, நவமணிகளையும்
மணப்  பொருள்களையும்  இடறிக்  கொண்டு செல்லும் வானரப்
படைக்கு, இருமருங்கும் ஓங்கிய  சோலைகளோடு  மணிகளையும்
ஆரங்களையும் இடறிக் கொண்டு செல்லும் காவிரி உவமையாயிற்று.
 

(6)
 

6752.

ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று,
யாதும் ஒழியா வகை சுமந்து, கடல் எய்தப்
போதலினும், அன்ன படை பொன்னி எனல் ஆகும்.
 

ஓதிய - (தொல்காப்பியம் முதலான தொல்நூல்களில் பகுத்து)
ஓதப்  பெற்ற;  குறிஞ்சி  முதலாய  -  குறிஞ்சியை  முதலாகக்
கொண்ட; நிலன் உள்ள- ஐவகை நிலங்களிலும் உள்ள; கோது
இல
- குற்றம் இல்லாத; அருந்துவன - உணவாக உட்கொள்ளும்
உணவுப்   பொருள்களையெல்லாம்;  கொள்ளையின் முகந்து-
மிகுதியாக அள்ளிக் கொண்டு; யாதும் ஒழியா வகை சுமந்து-
மீதியில்லாதவாறு   அனைத்தையும்   சுமந்து   கொண்டு; கடல்
எய்தப் போதலினும்
- கடலையடையச் செல்லுதலாலும்;அன்ன
படை - அந்த வானரப் (பெருஞ்)  சேனையை; பொன்னி எனல்
ஆகும்
- காவிரி என்று கூறுதல் தகும்.
 

சென்ற  பாடலில், காவிரியை உவமித்த கவி, இன்னும் மனம்
ஆராமையின்,  இன்னொரு   முறையிலும்   அச்சேனை  காவிரி
போன்றது  என  மேலும்   காவிரியை   உவமித்து மகிழ்தலால்,
காவிரியின்  மேல், கவிஞர் பெருமான்  வைத்துள்ள  பேரன்பின்
பெருமை புலனாம். குறிஞ்சி,  முல்லை, பாலை, மருதம், நெய்தல்
எனும் ஐவகை நிலப்பாகுபாடும், அவற்றில்  வாழும்  மக்களைப்
பாடுபொருளாகக்   கொண்ட  அகப்   புறப்  பொருளும் தமிழ்
நாட்டுக்கே உரியவையென உலக இலக்கியச்