முடியாதனவாய் ஆகிய சில வானரங்களை;உய்விடம் அளிக்கும் அருளாளர்- பிழைக்கும் இடம் காணாது தவிக்கும் அவற்றிற்கு அவ்விடம் காட்டிச் சில அருட் பண்பு வாய்ந்த குரங்குகள், நீட்டிய; கையினிடை முறை உய்த்தார் - கைகளின் மீதே அவற்றைச் செல்லுமாறு செலுத்தினர்; சென்று கரைகண்ட- (இவ்வாறு, அவற்றின் கையின்மேலே) சென்று கரையினையடைந்த வானரங்கட்கு; கரை இல்லை- ஓர் எல்லை இல்லை. |
எங்கு நோக்கினும் குரங்குகளின் உடல்கள் நெருக்கி நின்றன. இடையிற் சிக்கிய சில குரங்குகள் கீழேயோ, கடலிலேயோ வீழ்வதற்கும் இயலாதவாறு நடுவில் தவித்தன என்பார், "அயலில் வீழும் பொய் இடம் இலாத, புனலின் புக இலாத" என்றார். பொய் இடம் - காலியிடம் குரங்குகள் கை என்பதற்கு ஒழுக்கம் என்பதும் பொருளாதலால், பிறவிக் கடற்பட்டோர். அருளாளர் காட்டும் ஒழுக்க நெறியில் சென்று கரையேறலாம் என்பதும் தோன்ற, "அருளாளர் முறை உய்த்தார் கையிடை கொடுப்ப" எனினுமாம். |
(9) |
6755. | இழைத்தனைய வெங் கதிரின் வெஞ் சுடர், இராமன் |
| மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல், |
| தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம், உயர்ந்த |
| வழைத் தரு, எடுத்து அருகு வந்தனர், அநேகர். |
|
இழைத்து அனைய - (நவமணிகளை) இழைத்தாற்போன்ற; வெங் கதிரின் வெஞ்சுடர்- சூரியனுடைய கடுமையான வெயில்; இராமன் - இராமனுடைய; மழைத்த முகில் அன்ன- சூல் கொண்ட மேகம் போன்ற; மேனி வருடாமல் - திருமேனியைத் தீண்டாதவாறு; தழைத்த- நன்கு தழைத்துள்ளதனால்;நிழல் உற்ற - நிழல் மிகுந்த; சந்தனம் - சந்தன மரங்களையும்; உயர்ந்த வழைத் தரு - உயர்ந்தோங்கிய சுரபுன்னை மரங்களையும்; எடுத்து - பறித்துக் (கைகளில் ஏந்தியவாறு); அநேகர் அருகுவந்தனர் - வானரங்களிற் பலர் (குடைபிடித்தவாறு) அருகே (சூழ்ந்து) வந்தார். |
"அழைத்தவையெடுத்து அருகு சென்றனர்" எனப் பாடங் கொண்டு, "சுவாமி திருமேனியிலே கொம்புகள் படாமல், முன்னே கரங்களினாலே விலக்கிப் போனார்கள்" என்று பழைய உரை கூறுவதும் நயமாக உள்ளது. மரங்களோடு கூடிய மலைகளைச் சேது சமைக்க இட்டதை, "மாமுதல் தருவோடு ஓங்கும் வான் உயர் குன்றம்" (கம்ப. 6691) முதலிய பாடல்களில் சேதுபந்தனப் படலத்துள் குறிப்பிடுவார். |
(10) |