9. இலங்கை காண் படலம் |
இராமபிரான் தான் தங்கியிருந்த சுவேல மலையின் உச்சி மீது, தன் பரிவாரங்களுடன் ஏறிநின்று, இலங்கை மாநகரைக் கண்ணுறுகின்றான். அம்மாநகரின் அழகும் பொலிவும், வளமும், வாழ்வும் பெருமானின் நெஞ்சை வியக்க வைக்கின்றன. வியப்பில் எழுந்த உரைகள், இலக்குவனுக்குக் கூறுவதாய் அமைந்து அழகிய வர்ணனைக் கவிதைகளாய் இப்படலத்தில் வடிவம் பெற்றுள்ளன. |
இராமன் பரிவாரங்களுடன் சுவேல மலைமேல் ஏறுதல். |
6836. | அருந்ததி அனைய நங்கை அவ்வழி இருந்தாள் |
| என்று |
| பொருந்திய காதல் தூண்ட, பொன் நகர் காண்பான் |
| போல, |
| பெருந் துணை வீரர் சுற்ற, தம்பியும் பின்பு செல்ல, |
| இருந்த மால் மலையின் உச்சி ஏறினன் இராமன், |
| இப்பால். |
|
அருந்ததி அனைய நங்கை- அருந்ததி போன்ற கற்புடையாள் ஆகிய சீதா தேவி; அவ்வழி இருந்தாள் என்று- அந்த இலங்கையில் உள்ளாள் என்பது பற்றி; பொருந்திய காதல் தூண்ட - (உள்ளத்தே) பதிந்துள்ள காதல் தூண்டியதால்; பொன் நகர் காண்பான் போல - அழகிய இலங்கை மாநகரினைப் பார்க்க எழுந்தவன் போன்று; பெருந்துணை வீரர் சுற்ற - தனக்குப் பெருமைக்குரிய துணைவராய் இலங்கும் சுக்கிரீவன், வீடணன் ஆகிய இருவரும் இருபுறமும் செல்ல; தம்பியும் பின்பு செல்ல - தன் (அருமைத்) தம்பியாகிய இலக்குவனும் பின்னே வர; இருந்த மால் வரையின் உச்சி இராமன் ஏறினன்- தான் தங்கியிருந்த பெருமலையாகிய சுவேல மலையின் உச்சியை நோக்கி இராமபிரான் ஏறினான். இப்பால்- இதன் பின்னர்.... |
இச்செய்யுள் குளகம் அடுத்து வரும் கவிகளோடு கருத்து முடியும். காதலுக்கு உரியாரைக் காண இயலாக் காலத்து, அவர் இருக்கும் இடமும் காணற்கு உரியதாய் ஆவல் தூண்டுமாதலின், "காதல்தூண்டப் பொன்னகர் காண்பான்" என்றார். |
(1) |