மால் கடற்கு இறைவன் - பெருங்கடல்களுக்கு அரசனாகிய வருணதேவன்; பூண்ட மாலை போன்று உளது - அணிந்து கொண்ட மணிமாலை போன்று உள்ளது. |
கோலம், கோல் என நின்று அழகு எனும் பொருள் தந்தது. சால் படுத்தல்-பொருந்தும் படி வைத்தல். இந்திரனே சாலுங்கரி. (குறள் 25) எனுமிடத்து. சாலுதல் பொருந்துதல் எனும் பொருளில் வருதல் காண்க. |
சிற்ப சாத்திர வல்லுநர்கள் நூலிட்டு, நேர்பட அமையும் தெருக்களோடும், ஊரின் நடுவே அமையும் அரச மாளிகையோடும் நகர்களை அமைக்கும் திறத்தை நன்குணர்ந்தவர் கவிஞர்பிரான். |
"நூல் அறிபுலவர் நுண்ணிதிற் கயிறு இட்டுத்தே எங்கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து" (நெடுதல் 76-79) எனும் சங்கப் பாடற் சான்றால், இந்நிலத்தில் ஊர் அமைப்புக்கலையும் மனையமைப்புக் கலையும் தொன்மைச் சிறப்பொடு திகழும் பாங்கு புலனாம். |
(14) |
6850. | 'நல் நெறி அறிஞ ! நோக்காய்--நளி நெடுந் |
| தெருவின் நாப்பண் |
| பல் மணி மாடப் பத்தி நிழல் படப் படர்வ, பண்பால் |
| தம் நிறம் தெரிகிலாத, ஒரு நிறம் சார்கிலாத, |
| இன்னது ஓர் குலத்த என்று புலப்படா, புரவி |
| எல்லாம். |
நல் நெறி அறிஞ ! - சன்மார்க்கம் இன்னதென உணர்ந்தொழுகும் அறிவு சான்றோனே! நளி நெடுந் தெருவின் நாப்பண்- பெருமை நிறைந்த நீண்ட தெருக்களின் நடுவே; பல்மணி மாடப் பத்தி நிழல் படப்படர்வ - பற்பல மணிகள் இழைத்து கட்டப்பட்டுள்ள மாடமாளிகை வரிசையின் ஒளிகள் (தம்மீது) படச் செல்கின்றவையான; புரவி எல்லாம்- குதிரைகள் யாவும்; பண்பால் தம் நிறம் தெரிகிலாத - இயற்கையாக அமைந்த தமது நிறம் அறிய இயலாமல்;ஒரு நிறம் சார்கிலாத - ஒரு குறிப்பிட்ட நிறத்தையும் கொள்ளாமல்; இன்னதோர் குலத்த என்று புலப்படா நோக்காய் - இன்ன நிறம் உடையவை இவை என்று அறிய இயலாதவை ஆயின (என்பதைப்) பாராய். |
இலக்குவன் இந்நெறி மேற் கொண்டு ஒழுகுவான் என்பதனை, "வளையாவரு நன்னெறி நின்னறிவு ஆகும் அன்றே" (1730) என நகர் நீங்கு படலத்திலும் குறித்தமை நினைக. நளி - பெருமை. |
(15) |