இராவணன் வானர சேனையைக் காணக் கோபுரம் ஏறுதல் | 6859. | இன்னவாறு இலங்கைதன்னை இளையவற்கு | | இராமன் காட்டி, | | சொன்னவா சொல்லாவண்ணம் அதிசயம் தோன்றும் | | காலை, | | அன்ன மா நகரின் வேந்தன், அரிக் குலப் பெருமை | | காண்பான், | | சென்னி வான் தடவும் செம் பொற் கோபுரத்து | | உம்பர்ச் சேர்ந்தான். | இன்னவாறு- இவ்விதமாக; இலங்கை தன்னை - இலங்கை மாநகரத்தை; இராமன் இளையவற்குக் காட்டி - இராமபிரான் இலக்குவனுக்குக் காண்பித்து; சொன்னவா சொல்லா வண்ணம்- சொன்னவற்றைத் திரும்பிச் சொல்லாதவாறு (புதிது புதிதாக இலங்கையில்) அதிசயம் தோன்றும் காலை -விந்தைக் காட்சிகளே தோன்றிக் கொண்டிருக்கையில்; அன்ன மாநகரின் வேந்தன் - அத்தகைய பெருநகரின் அரசனான இராவணன்; அரிக்குலப் பெருமை காண்பான் - குரங்குக் கூட்டத்தின் பெருமையினைக் காண்பதற்காக; சென்னி வான் தடவும்- உச்சியானது விண்ணைத் தொடுகின்ற; செம்பொன் கோபுரத்து உம்பர் சேர்ந்தான் - செம்பொன்னாலாகிய கோபுரம் ஒன்றின் உச்சியை அடைந்தான். | (24) |
|
|
|