10. இராவணன் வானரத் தானை காண் படலம் |
இராவணன், இலங்கைக் கோட்டைக் கோபுரத்தின் மீதேறி, தன் பரிவாரங்களுடன் நின்று, இராமனுடைய வானரத்தானையைக் கண்ணுறுவது பற்றிக் கூறும் பகுதி இப்படலம் ஆயிற்று. |
இராமனைக் கண்ணுற்றதும் இராவணன் அடைந்த மெய்ப்பாடுகளும், மற்றவர்கள் யார்? யார்? என இராவணன் வினாவலும் சாரன், அவனுக்கு இலக்குவன், வானரப்படை வீரர்கள் முதலியோர் பற்றி எடுத்துரைப்பதும் இப்படலத்துள் அமைந்துள்ளன. |
கோபுரத்தின் மேல் இராவணன் நின்ற நிலை |
கலிவிருத்தம் |
6860. | கவடு உகப் பொருத காய் களிறு அன்னான், |
| அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் |
| சுவடுடைப் பொரு இல் தோள்கொடு, அனேகம் |
| குவடுடைத் தனி ஓர் குன்று என, நின்றான். |
|
கவடு உகப் பொருத- (தன்னைக்) கட்டியிருக்கும் கட்டுத்தறி முறியும்படி மோதித் தாக்கும்; காய் களிறு அன்னான் - சினமுடைய ஆண் யானை போன்ற இராவணன்; அவள் துயக்கின் - சீதா தேவியின்பால் கொண்ட மையலால்; அம்புற- மன்மதன் மலர்க்கணைகள் தைத்ததால்; வெம்பும் - வருந்துகின்ற; சுவடு உடை - தழும்புகளைப் பெற்ற; பொருஇல் தோள் கொடு - ஒப்பற்ற தன் தோள்களோடு; அனேகம் குவடுஉடை- பல சிகரங்களையுடைய; தனி ஓர் குன்றென நின்றான் - ஒப்பற்ற ஒரு மலை போல (கோபுரம் ஏறி) நின்றான். |
முன்பு ஒழுக்க பலம் இருந்த காலை, திக்குயானைகளின் கொம்பொடிந்தது. இன்று, அது குறைந்த காலை மலர்க்கணைகள் துளைக்க முடிந்தது. அன்றொரு சுவடு, இன்றொரு சுவடு! என அவனை நுட்பமாகப் பரிகசித்த வாறுமாம். |
(1) |