6861. | பொலிந்ததாம் இனிது போர் எனலோடும், |
| நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் |
| மெலிந்த தோள்கள் வடமேருவின் மேலும் |
| வலிந்து செல்ல, மிசை செல்லும் மனத்தான். |
|
நலிந்த நங்கை எழிலால் - (இராமன் பிரிவால்) வருந்தி மெலிந்துள்ள சீதையின் அழகால், நாளும் வலி மெலிந்த தோள்கள்- நாளுக்கு நாள் வலிமை தளர்ந்த, (இராவணன்) புயங்கள்; போர் எனலோடும் - போர் (வந்து விட்டது) என்றவுடனே; இனிது பொலிந்தது ஆம்- மகிழ்ச்சியால் மேலும் உயர்ந்து விளங்கியன ஆயின; வடமேருவின் மேலும்- வடக்குத் திசைக்கண் உள்ள மேருமலையின் மேலும்; வலிந்து செல்ல - வலியப் போர்க்குச் செல்ல; மிசை செல்லும் மனத்தான் - உந்துகின்ற உள்ளத்திண்மையுடையவன் ஆனான் அவன். |
பொலிதல்-முன்னிலும் மேம்பட்டு விளங்குதல். இராமனுக்காக அந்நங்கை மெலிந்தாள்; அந்நங்கைக்காக இவன் மெலிந்தான் என்பது ஒரு நயம். |
(2) |
6862. | செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க, |
| அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக, |
| வெம்பு காலினை விழுங்கிட, மேல்நாள், |
| உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான். |
|
செம்பொன் மௌலி - செம்பொன்னால் ஆன கலசங்கள், (அக்கோபுரத்தில்); சிகரங்கள் தயங்க - மேருமலையின் சிகரங்களைப் போல் ஒளிர, அம்பொன் மேருவரை கோபுரம் ஆக- அழகிய பொன்னாலான மேருமலையாக அந்தக் கோபுரங்கள் விளங்க; வெம்பு காலினை - (தன்னோடு) சினந்த அந்தக் காற்றுக் கடவுளை; விழுங்கிட - வெல்வதற்காக; மேல் நாள்- முன்பு ஒரு நாள்; உம்பர் மீதில் நிமிர் - (மேருவின்) உச்சியின் மீது நிமிர்ந்து (வளைத்துக் கொண்ட); வாசுகி ஒத்தான் - வாசுகி எனும் பாம்பினைப் போன்று நின்றான் (இராவணன்.) |
வாசுகியைப் பாம்பென்னும் ஒற்றுமை பற்றி, ஆதிசேடனாகவும் கூறுவர். உபசார வழக்கு. கால்-காற்று. உம்பர் - மேல். |
(3) |
6863. | தொக்க பூதம்அவை ஐந்தொடு துன்னிட்டு |
| ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும், |