| பக்கமும், நிழல் பரப்பி, வியப்பால் |
| மிக்கு நின்ற குடை மீது விளங்க. |
|
தொக்க பூதம் அவை- ஒன்றாக இணைந்துள்ள ஐந்தொடு - மண், நீர், தீ, காற்று, வான் என்னும் பூதங்கள் ஐந்தோடும்; துன்னிட்டு - பின்னிப் பிணைந்து; ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும் - ஒன்று கூடி நின்ற திசைகள் பத்தும் (சூழ்ந்த இவ்வுலகிலும்); பக்கமும் - இவ்வுலகைச் சுற்றிப் பக்கம் சூழ்ந்துள்ள பிற உலகங்களிலும்; நிழல் பரப்பி - தன் ஆட்சி நிழலைப் பரப்பி, வியப்பால் மிக்குநின்ற- (யாவரும்) வியக்கும் வண்ணம் மேம்பட்டு நின்ற; குடை மீது விளங்க - (இராவணனது) குடை அவன் முடி மீது ஒளிவீசவும்; |
பூதங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றும்; ஒடுங்கும் ஆதலின் "தொக்க பூதம்" என்றார். வைணவ சித்தாந்த நூல்கள் கூறும் பஞ்சீகரணத் தத்துவப்படி, ஐந்து பூதங்களுள் ஒவ்வொன்றும் செம்பாதியாக்கி, அப்பாதியை நான்கு நான்காக்கி, அவை ஒவ்வொன்றிலும் பாதிவிடுத்து, பாதியை அந்நான்குகளோடும் கூட்ட இப்பிரபஞ்சப் பொருள்கள் யாவும் உண்டாயின எனும் கூற்றையுட்கொண்டு "தொக்க பூதம்" என்றார் எனினுமாம். "ஐந்து பூதமும் பத்தாக்கி, அவை பாதி நந்நான்காக்கி, நந்து தம் பாதிவிட்டு நான்கொடு நான்கும் கூட்ட, வந்தன தூலபூதம்" என்று கைவல்ய நவநீதமும் (குத்துவிளக்கம். 41) புகலும். இராவணன் ஆட்சி பிரபஞ்சம் முழுவதும் வியாபித்து நின்றது என்பதாம். இதுமுதல் 6875ஆம் பாடல் வரை தொடர்ந்து 6876 ஆம் பாடல் இரண்டாவது அடி இறுதியில் உள்ள நின்றான் என்ற முடிபைப் பெறும். |
(4) |
6864. | கைத் தரும் கவரி வீசிய காலால், |
| நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் |
| தத்தி வீழ் அருவியின் திரள் சால, |
| உத்தரீகம் நெடு மார்பின் உலாவ, |
|
நெய்த்து இருண்டு உயரும்- பளபளத்துக் கருமை நிறத்தோடு உயர்ந்தோங்கியுள்ள; நீள் வரை மீதில்- மீண்டும் கிடக்கும் மலைமீதில்; தத்தி வீழ் அருவியின் திரள்சால- தவழ்ந்து வீழ்கின்ற அருவியின் தொகுதி போல; கை தரும் கவரி வீசிய காலால் - கைகளால் வீசப்படும் கவரிகளால் எழும் காற்றின் விசையில்; நெடுமார்பில் - இராவணனின் நெடிய மார்பில்; உத்தரீகம் உலாவ - மேலாடை அசைந்து விளங்க... |