கூய்-கூவி. எல்லோர்க்கும் தெரியுமாறு உரைத்தல். கூவியுரைத்தலாம். சாய்-சாயல்; உவமை. யானையின் வருகையை மணி ஒலி உரைப்பது போல் இராவணன் வருகையை நறுமணம் தூதாக வந்து உரைக்கும் என அழகுற மொழிந்தார். வேய்-தூது; ஒற்றுமாம். |
(15) |
6875. | வேத்திரத்தர், எரி வீசி விழிக்கும் |
| நேத்திரத்தர், இறை நின்றுழி நில்லாக் |
| காத்திரத்தர், மனை காவல் விரும்பும் |
| சூத்திரத்தர், பதினாயிரர் சுற்ற, |
|
வேத்திரத்தர் - (கைகளிற்) பிரம்பினை ஏந்தியவரும்; எரிவீசி விழிக்கும் நேத்திரத்தர் - தீயுமிழுமாறு பார்க்கும் கண்களையுடையவரும்; இறை நின்றுழி நில்லாக் காத்திரத்தர் - சிறிது நேரம்கூட நின்ற இடத்திலேயே நில்லாமல் (உலவிக் கொண்டேயிருக்கும்) உடம்பினையுடையவரும்; மனை காவல் விரும்பும் சூத்திரத்தர்- அரண்மனைக் காவலுக்கு விரும்பியேற்க வல்ல உபாயங்கள் அறிந்தவரும்; பதினாயிரர் சுற்ற- பத்தாயிரம் பேர் சுற்றிக் காவல் புரியவும்... |
வேத்திரம்-பிரம்பு. காத்திரம்-உடல். அரண்மனை வாயிற்காவலர்கள் நின்ற இடத்து நில்லாமல் நடந்த வண்ணம் பணிபுரிபவர் ஆதலின், "இறை நின்றுழி நில்லாக் காத்திரத்தர்" என்றார். இறை-சிறிது சூத்திரம்-உபாயம், நுட்பம். |
(16) |
இராவணன், இராமனைக் காணுதல் |
6876. | தோரணத்த மணி வாயில்மிசை, சூல் |
| நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான், |
| ஆரணத்தை, அரியை, மறை தேடும் |
| காரணத்தை, நிமிர் கண் கொடு கண்டான். |
|
தோரணத்த மணிவாயில் மிசை- தோரணங்களோடு மணிகள் பதித்துள்ள கோட்டை வாயில் கோபுரத்தின் மேல்; சூல் நீர் அணைத்த முகில் ஆம் என-கருவாக நீரினை உட்கொண்டுள்ள கருமேகம் என்னுமாறு; நின்றான் - நின்றவனாகிய இராவணன்; ஆரணத்தை- நான் மறைகளின் வடிவு கொண்டவனை; அரியை- (அம்மறைகளின் நாயகனான) திருமாலை; மறை தேடும் காரணத்தை - அம்மறைகள் முழுதும் அறிய இன்னும் தேடிக் கொண்டிருக்கும் காரணப்பொருளை |