பக்கம் எண் :

 இராவணன் வானரத் தானை காண் படலம் 525

(இராமபிரானை)  நிமிர்  கண்கொடு கண்டான் - (ஆணவம்)
ஓங்கிய தன் விழிகளால் பார்த்தான்.
 

இராவணன்,  இராமபிரானை   முதன்முதலாகச்  சந்திக்கும்
சந்திப்பு ஆதலால், ஆர்வம்  குமிழியிட, "ஆரணத்தை, அரியை,
மறை தேடும் காரணத்தை" என அடுக்குகின்றார் கவிஞர் பிரான்.
இராமபிரானை, வீடணன் சந்தித்த போதும், இவ்வாறே உவகை
மிகக்கூர்வார். (6493-98) ஆதலின் "நிமிர் கண் கொடு கண்டான்"
என்றார், கொடு-கொண்டு என்பதன் விகாரம். கண்டான் எனவே
போதுமாயினும்   'கண்கொடு'   என்றது   அவன்  கண் பெற்ற
பேற்றினைச் சுட்டியதாம். 
 

(17)
 

6877.

மடித்த வாயினன்; வழங்கு எரி வந்து

பொடித்து இழிந்த விழியன்; அதுபோழ்தின், 

 

இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்;

துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள். 
 

மடித்த வாயினன்-  (இராமபிரானைக்.  கண்ட  இராவணன் 
எழுந்த  வெகுளியால்)  உதட்டைக்  கடித்த வாயினன்  ஆனான்;
வயங்கு எரி வந்து - ஒளிர்கின்ற சினத்தீ தோன்றி;  பொடித்து
இழிந்த   விழியன்
  -   சிறுசிறு    பொறிகளாய்   விழுகின்ற 
கண்களையுடையவன்  ஆனான்;  அது போழ்து- அப்பொழுது;
வன்திசை இடித்த- வலிய திசைகளில் அவன் சின ஆவேசத்தால்
இடி போன்ற ஒலி உண்டாயிற்று; நெஞ்சம் எரிந்தது- (சினத்தால்)
அவன்   உள்ளம்   பற்றி   எரிந்தது; கண்ணினோடு  - அவன்
கண்களோடு சேர்ந்து; இடத்திரள்  தோள்கள்- இடப்பக்கத்தே
திரண்ட அவன் பத்துத் தோள்களும்; துடித்த - துடித்தன.
 

துடித்த -அன்சாரியை பெறாத பலவின்வினை. வாய் மடித்தல்-
உதடு  கடித்தல்.  சினத்தின்  மெய்ப்பாடு. "மடித்த  பில வாய்கள்
தொறும் வந்து புகை  முந்த" (3115) சினத்தால்  அவன்  கண்கள்
உலைக்களமாகி, தீப்பொறிகள் சிந்தின என்று அவன் வெகுளியின்
உச்சம் விளம்பினார். 
 

(18)
 

6878.

ஆக, ராகவனை அவ்வழி கண்டான்;

 

மாக ராக நிறை வாள் ஒளியோனை

ஏக ராசியினின் எய்த எதிர்க்கும் 

வேக ராகு என, வெம்பி வெகுண்டான்.