பக்கம் எண் :

 மகுட பங்கப் படலம் 543

- இரத்தம்    துளிதுளியாய்ப் பொங்க;  உறுக்கி எதிர்புக்கு -
சினம் பொங்கி, இராவணன் முன்னே சென்று; உடல் பொருந்தி
- (அவனுடன் தன்) உடலைப் பூட்டி; கடுத்த விசையில் - மிக்க
வேகத்துடன்; கடிது எழும்பி - விரைந்து மேல் எழுந்து; கதிர்
வேலான்
  -  ஒளி   மிகு   வேல்   ஏந்திய  இராவணனுடைய;
முடித்தலைகள் பத்தினும்
- மகுடம் அணிந்த தலைகள் பத்தின்
மேலும்; முகத்தினும்   -   முகத்தின் மேலும்; உதைத்தான்
(சுக்கிரீவன்) உதைத்தான்.
 

முகத்திலும் தலையிலும் உதை விழல்-செய்தவன் உயர்வையும்,
செய்யப்பட்டவன் இழிவையும் உணர்த்தும் இப்பாடலில்  மற்போர்
முறை சுட்டப்பட்டுள்ளது. 
 

(10)
 

6905.

உதைத்தவன் அடித் துணை பிடித்து, ஒரு கணத்தில், 

பதைத்து உலைவுறப் பல திறத்து இகல் பரப்பி, 

மதக் கரியை உற்று அரி நெரித்தென மயக்கி, 

சுதைத் தலனிடை, கடிது அடிக்கொடு துகைத்தான். 

 

உதைத்தவன்     அடித்துணை    பிடித்து  -  தன்னை
உதைத்தவனான (சுக்கிரீவனின்)  கால்கள்  இரண்டினையும்  பற்றி;
ஒரு கணத்தில்
- ஒரு விநாடிப் பொழுதில்; பதைத்து உலைவுற-
(சுக்கிரீவன்) துடிதுடித்து வருந்துமாறு; பல திறத்து இகல் பரப்பி
- பல்வேறு   வகைப்பட்ட   (தன்)    மற்போரின்  வலிமைகளை
வெளிப்படுத்தி; அரி மதகரியை உற்று நெரித்து என  - சிங்கம்
மதயானையை    நெருங்கி   நெருக்கினாற்  போல;   மயக்கி -
மூர்ச்சையடையச் செய்து; சுதைத் தலனிடை- சுண்ணாம்பு தீற்றிய
தரை நிலத்தில் இட்டு; கடிது அடிக்கொடு   - விரைவாகக் கால்
கொண்டு; துகைத்தான்- தேய்த்தான் (இராவணன்).
 

சுதைத்தலன்-சுண்ணாம்பு தீற்றிய தரை. துகைத்தல்-கால்களால்
தேய்த்து உழக்குதல். மதயானையைச் சிங்கம்   வதக்குவது போல்,
இராவணன் சுக்கிரீவனைத்   துன்புறுத்தித் தேய்த்தான் என்பதால்
இது உவமையணி.
 

(11)
 

6906.

துகைத்தவன் உடற் பொறை சுறுக்கொள இறுக்கி, 

தகைப் பெரு வலத்தொடு தலத்திடை அமுக்கி, 

வகைப் பிறை நிறத்து எயிறுடைப் பொறி வழக்கின். 

குகைப் பொழி புதுக் குருதி கைக்கொடு குடித்தான்.