அங்கதன் நால்வர் உயிருண்டு கூறுதல் |
7013. | ஏவினார் பிடித்தாரை எடுத்து எழத் |
| தாவினான், அவர்தம் தலை போய் அறக் |
| கூவினான், அவன், கோபுர வாயிலில் |
| தூவினான், துகைத்தான், இவை சொல்லினான்: |
|
ஏவினார் பிடித்தாரை - இவ்வாறு இராவணனால் ஏவப்பட்டவர்களாய்த் (தன்னைப்) பிடிக்க வந்த நால்வரையும்; எழ எடுத்து தாவினான்-அந்தரத்தில் தொங்குமாறு அவர்களைப் பற்றிக்கொண்டு உயரப் பாய்ந்து; அவர் தம் தலை போய் அற- அவர்கள் தலைகள் அற்று ஒழியச் செய்து; கூவினான்- முழக்கமிட்டு; அவன் கோபுர வாசலில் தூவினான் - (அவர்களுடல்) இராவணனுடைய அரண்மனைக் கோபுர வாசலில் சிதறிவிட்டு; துகைத்தான் - மிதித்தவனாய்; இவைசொல்லினான்- பின்வரும் சொற்களை மொழிந்தான். |
இப்பாடலில் வெகுளியின் மெய்ப்பாடுகள் சொல் வடிவம் பெற்றுள்ளன. ஏவினார்-ஏவப்பட்டவர். செயப்படுபொருள் வினை. செய்வினை போல வந்தது. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற் படக்கிளத்தலும் வழக்கு இயல் மரபே. (தொல். சொல்: 6. 49). |
(40) |
7014. | 'ஏமம் சார, எளியவர் யாவரும், |
| தூமம் கால்வன, வீரன் சுடு சரம், |
| வேம் மின் போல்வன, வீழ்வதன் முன்னமே, |
| போமின் போமின், புறத்து' என்று போயினான். |
|
தூமம் கால்வன - (பின்பு அங்கிருந்த வீரர்களை நோக்கி) புகை கக்குகின்றனவும்; வேம் மின் போல்வன- கொதிக்கின்ற மின்னல்களைப் போல்வனவும் ஆகிய; வீரன் சுடுசரம் - இராமபிரானுடைய சுட்டெரிக்கின்ற அம்புகள்; வீழ்வதன் முன்னமே-உங்கள் மீது வந்து வீழ்வதன் முன்னமே; எளியவர் யாவரும் - வலிமையற்ற நீங்கள் அனைவரும்; ஏமம் சார - பாதுகாப்பான இடங்களையடையும்படி, (இப்போதே); புறத்துப் போமின் போமின் - அப்பால் செல்லுங்கள்; செல்லுங்கள்; என்று போயினான்- என்று சொல்லியவாறே (இராமபிரான் இருக்குமிடம் சென்றான் அங்கதன்) |
(41) |