பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 621

இராமனிடம் அங்கதன் செய்தியுரைத்தல்
 

7015.

அந்தரத்திடை ஆர்த்து எழுந்தான், அவர்

சிந்து ரத்தம் துதைந்து எழும் செச்சையான், 

இந்து விண்நின்று இழிந்துளதாம் என, 

வந்து, வீரன் அடியில் வணங்கினான். 

 

சிந்து   ரத்தம் - சிந்திய உதிரத்தினால்; துதைந்து எழும்
செச்சையான்
  - நெருங்கித்  தோன்றிய செஞ்சந்தனம் போன்ற
பூச்சுக்களையுடைய அங்கதன்; அந்தரத்திடை- ஆகாயத்தினில்;
ஆர்த்தெழுந்தான் 
-   ஆர்ப்பரித்தவாறு      எழுந்தானாகி;
விண்ணின்று
- ஆகாயத்திலிருந்து; இந்து   இழிந்துளது ஆம்
என
- சந்திரன் (பூமியில்) இறங்கியது என்று(கண்டோர் கருதுமாறு);
வந்து வீரன் அடியில் வணங்கினான்
-  வந்து இராமபிரானின்
திருவடிகளை வணங்கி நின்றான்.
 

(42)
 

7016.

உற்ற போது, 'அவன் உள்ளக் கருத்து எலாம்,'

கொற்ற வீரன், 'உணர்த்து' என்று கூறலும், 

'முற்ற ஓதி என்? மூர்க்கன், முடித் தலை 

அற்றபோது அன்றி, ஆசை அறான்' என்றான். 

 

உற்றபோது - (அங்கதன்) வந்தடைந்த பொழுதில்; கொற்ற
வீரன்
- வெற்றி வீரனாகிய இராமன்; அவன் உள்ளக் கருத்து
எலாம்
  -  அந்த  இராவணனுடைய   மனக்கருத்தையெல்லாம்;
உணர்த்து
என்று கூறலும் - (எனக்குத்) தெரிவிப்பாயாக என்று
கூறியவுடன்;    முற்ற ஓதி என்- (அங்கதன்) (அந்த அரக்கன்
நிலையை) முழுவதும் விரித்துக் கூறி என்ன பயன்? மூர்க்கன்-
அந்தக்  கொடியோன்;  முடித்தலை  அற்ற  போது அன்றி-
அவனுடைய  மகுடம்   சூடிய  (பத்துத்) தலைகளுள் அறுபட்டு
(மண்ணில்  வீழ்ந்தாலன்றி);   ஆசையறான்  -  அவன் ஆசை
நீங்கான் என்றான்....
 

சொற் சுருக்கமும் பொருட் பெருக்கமும் அமைய உரையாடுந்
திறத்துக்கு,   இங்கு    இராமனும்  அங்கதனும் உரையாடியுள்ள
திறத்தைச்   சான்றாகக்   கொள்ளலாம். "மூர்க்கனும் முதலையும்
கொண்டது  விடா"     ஆதலின்,   கொண்ட ஆசையைக் குலம்
அழியினும் விடாத இராவணனை "மூர்க்கன்" என்றார்.
 

(43)