இராமபிரானோடு இராவணன் முதன் முதலாக போர் புரிகின்ற செய்தி கூறுதலால், இப்படலம் இப்பெயர் பெற்றது. நான்கு திசைகளிலும் கோட்டையைச் சுற்றி நிறுத்தியுள்ள அரக்கர் படைகளின் மேல் வானரப்படைகள் மோதுவதும், படைத்தலைவர்கள் மோதுவதும் சொல்லப் பெற்றுள்ளன. நால்திசைப் படைகளும் அழிவெய்தியமையை ஒற்றரால் உரைக்கப்பெற்ற இராவணன் பெருஞ்சினம் மூண்டு தானே களம் எய்துகிறான். சுக்கிரீவனும். இலக்குவனும் இராவணனிடம் போரிட்டுச் சோர்கின்றனர். அனுமனும் இராவணனும் மார்பில் குத்துக் குத்திப் போரை முடித்துக் கொள்கின்றனர். வேல் துளைத்துச் சோர்ந்த இலக்குவனை, இலங்கைக்குள் எடுத்துச் செல்ல முயலும். இராவணன் முயற்சி வெற்றி பெறவில்லை. மலையெடுத்த இராவணனால் தூக்க இயலாத இலக்குவனை, குட்டியைத் தூக்கும் தாய் போல், அனுமன் அப்புறம் எடுத்துச் சென்று விடுகின்றான். இறுதியில் இராமனும் இராவணனும் மோதுகின்றனர். போரில் அனைத்தும் இழந்த இராவணனைக் கொல்ல நினையாது, "போர்க்கு இன்று போய் நாளை வா" எனும் அமர வாக்கியத்தை மொழிந்து அருள் புரிகிறான். கோசல நாடுடைய வள்ளல் இராமபிரான். இச் செய்திகள் இப்படலத்துள் உரைக்கப் பெறுகின்றன. |