வானரப்படை அகழியைத் தூர்த்தல். |
7020. | தடங் கொள் குன்றும் மரங்களும் தாங்கியே, |
| மடங்கல் அன்ன அவ் வானர மாப் படை, |
| இடங்கர் மா இரிய, புனல் ஏறிட, |
| தொடங்கி, வேலை அகழியைத் தூர்த்ததால். |
|
தடம் கொள் குன்றும் மரங்களும் - பெரிய மலைகளையும், மரங்களையும்; தாங்கிய - ஏந்திச் சென்று; மடங்கல் அன்ன - சிங்கத்தைப் போன்ற; அவ்வானரப்படை- அந்தப் பெரிய குரங்குச் சேனை; இடங்கர் இரியப் புனல் ஏறிட- முதலை போன்ற நீர் வாழ் உயிர்கள் நிலை கெட்டோடவும்; அகழி நீர் தளும்பி வழியவும்' தொடங்கி - பணியினைத் தொடங்கி; வேலை அகழியைத் தூர்த்தது- கடல் போன்ற அகழியைத் தூர்த்தது. |
அகழியில் கற்களும் மரங்களும் விழுந்தபொழுது, அகழிநீர் வழிவதனை, "புனல் ஏறிட" என்றார். |
(4) |
7021. | ஏய வெள்ளம் எழுபதும், எண் கடல் |
| ஆய வெள்ளத்து அகழியைத் தூர்த்தலும், |
| தூய வெள்ளம் துணை செய்வது ஆம் என |
| வாயிலூடு புக்கு, ஊரை வளைந்ததே. |
|
எண்கடல் ஏய வெள்ளம் எழுபதும் - எட்டாம்கடல் போன்று விரிந்துள்ள எழுபது வெள்ளம் குரங்குப் படையும்; வெள்ளத்து ஆய அகழியை - நீர்ப் பெருக்கைக் கொண்ட அகழியை; தூர்த்தலும் - (மலைகளாலும் மரங்களாலும்) நிரப்பும்போது; தூய வெள்ளம் - தூய்மையான வெண்ணிறம் கொண்ட அந்த வெள்ள நீரானது; துணை செய்வது ஆம் என- (இராமபிரானுக்கு) உதவி புரிவதைப் போன்று; வாயில் ஊடு புக்கு ஊரை வளைத்தது - இலங்கை மாநகரின் வாயில்கள் வழியாக உள்ளே புகுந்து ஊரை வளைத்துக் கொண்டது. |
(5) |
7022. | விளையும் வென்றி இராவணன் மெய்ப் புகழ் |
| முளையினோடும் களைந்து முடிப்பபோல், |
| தளை அவிழ்ந்த கொழுந் தடந் தாமரை |
| வளையம், வன் கையில், வாங்கின--வானரம். |