பக்கம் எண் :

17   யுத்த காண்டம்

இராம, இலக்குவர் என்ற இருவர் மட்டுமே  போர்புரிந்தனர்.  கரன்
முதல் இராவணன் வரை உள்ளவர்கள் பல்வேறு படைக்கலங்களைக்
கொண்டிருந்தமையின் ஒவ்வொருவரும்   ஒவ்வொரு     முறையில்
போரிட்டனர். இராம, இலக்குவர்களைப்    பொறுத்தவரையில் வில்,
அம்புகள் என்பவை தவிர  வேறுவகைப்பட்ட     படைக்கலங்கள்
எதுவுமில்லை என்பதை அறியும்  பொழுது   வியப்பு அதிகமாகிறது.
அப்படி இருக்க, போர்களைப்  பற்றி விரிவாகப் பாடும் கம்பன், ஒரு
போரைப்போல் மற்றொரு போர் இல்லாமல், புதிய புதிய யுக்திகளைக்
கையாண்டு    யுத்த  காண்டத்தைப் பாடுகிறான். கதை  நிகழ்ச்சிகள்
எதுவுமில்லாமல், போரைப் பற்றிப்   பாடும்பொழுது  படிப்போருக்கு
அலுப்புத்தட்டுதல் இயல்பே.  ஆனால்,    கம்பநாடன்  புதிய புதிய
யுக்திகளைக் கையாள்வதால்,   போரைப்பற்றிப் பாடும்பொழுதுகூடப்
படிப்போருக்கு அலுப்புத் தட்டுவதில்லை.
 

இதுபற்றி விரிவாய் பேசுவதற்கு இது இடமில்லை. என்றாலும்,
போர்க்களச்  செய்திகள் என்று கம்பன் காட்டும்    சிலவற்றைக்
காண்பது பொருத்தமுடைய தாகும்.
 

ஆரணிய   காண்டத்தில்      கரனுடன் நடைபெறும் போரும்,
சுந்தரகாண்டத்தில் அதிகாயன்,   அக்ககுமாரன்,   படைத்தலைவன்,
இந்திரசித்தன்     ஆகியோருடன்    அனுமன்  நடத்திய போரும்
விரிவாகப் பேசப்பட்டுள்ளன. கர   தூடணர்களுடன் ஆரண்யத்தில்
இராமன்   செய்த     போர் வெட்ட  வெளியில் நடைபெற்றதாகும்.
கோட்டை, கொத்தளம் முதலிய எதுவும் அங்கில்லை. அதே போல,
சுந்தர      காண்டத்தில்   அனுமன் செய்த போர்களும், அசோக
வனத்தை அடுத்த வெட்ட வெளியில்    நடந்தவையே     ஆகும்.
வெட்டவெளியில் நடைபெறுகின்ற  போருக்கும், ஒரு கோட்டையை
முற்றுகையிட்டு நடைபெறும் போருக்கும் சில வேறுபாடுகள் உண்டு.
இதனை மனத்தில்     வாங்கிக்கொண்ட கம்பன், இலங்கைப் போர்
தொடங்குவதற்கு    முன்னர்    இரண்டு பக்கத்தாராலும் படைகள்
எவ்வாறு அணிவகுத்து     நிறுத்தப் பெற்றன என்பதை விரிவாகக்
கூறுகிறான்.
 

இத்தகைய     போர்களில்     கோட்டையைச் சுற்றி  நான்கு
புறங்களிலும் நான்கு பெருவாயில்கள் அமைக்கப்பட்டிருக்கும்.