பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 629

ஏறி; விண் தொட்டவானரம்- ஆகாய முகட்டைத் தொட்டு
நின்ற வானரங்கள்;   மீதொக   விட்ட- மதில்  முகட்டில்
பலவாகத்   தொங்க விடப்பட்ட;   வெண்கொடி  என்ன
வெள்ளைக் கொடிகள் என்னுமாறு;    வீங்கின-  மிகுந்து
தோன்றின.
 

மதில்   உச்சியில்   வெள்ளைக்கொடிகள்     பல
பறப்பதைப்போல், வெண்ணிறங்கொண்ட வானரங்களின்
இயக்கம்  மதிலின் மேல் இருந்தன. வானரங்கள் வெண்
கொடிகட்கு  உவமையாயின.  இலங்கையைச் சுற்றியுள்ள
மதில்கள்   வட்ட   மேருவாய்   இலங்கின ஆதலின், 
"வட்ட மேரு இது என" என்றார். இல்பொருள் உவமம். 
 

(14)
 

7031.

இறுக்க வேண்டுவது இல்லை; எண் தீர் மணி

வெறுக்கை ஓங்கிய மேரு விழுக் கலால்

நிறுக்க, நேர்வரும் வீரர் நெருக்கலால்,

பொறுக்கலாது, மதிள் தரை புக்கதால்.

 

எண்தீர்  மணி  வெறுக்கை ஓங்கிய- எண்ணில் 
அடங்காத மாணிக்கங்களாகிய செல்வம் நிறைந்த; மேரு
விழுக் கல்லால்
-மேரு மலையென்னும் எடைக்கல்லினால்;
நிறுக்க-  எடை போட;  நேர்  வரும்- (அதற்கு) எடை 
சமமாக வரத்தக்க; வீரர் நெருக்கலால் - வானர வீரர்கள்
அழுத்தியமையால்;  பொறுக்கலாது- (அந்தக் கணத்தைத்)
தாங்க மாட்டாமல்;  மதில்  தரை புக்கதால்- (இலங்கை 
மாநகரின்)  மதில்  கீழே  அழுந்தியமையால்;   இறுக்க 
வேண்டுவது  இல்லை
-  (அந்த  இலங்கை   மதிலை) 
(வானரவீரர்கள்)   உடைத்தெறிய   வேண்டிய   அவசியம்
இல்லாமல் போனது.
 

பொன்னும் மணியும்  பொதிந்த மேருமலையை ஒரு 
தட்டிலும்,வானர  வீரர்களை  ஒரு  தட்டிலும்   வைத்து
 நிறுத்தால்,  வானர வீரர்கள்   தட்டே   தாழும்  என 
வானரங்களின் எடையும்  தொகையும் சுட்டி வியந்தவாறு,
உயர்வு நவிற்சியணி.
  

(15)
 

அரக்கர் சேனை எழுச்சி
 

7032.

அறைந்த மா முரசு; ஆனைப் பதாகையால்

மறைந்தவால், நெடு வானகம்; மாதிரம் 

குறைந்த, தூளி குழுமி; விண்ணூடு புக்கு 

உறைந்தது, ஆங்கு அவர் போர்க்கு எழும் ஓதையே.