'உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டுடைய பரமன் ஒருவனே ஆதலின் 'ஒன்றே என்னின் ஒன்றே யாம்' என்றார். அந்த ஒரு பரம் பொருளே, 'திட விசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவை மிசைப்படர் பொருள் முழுவதுமாய் அவை அவை தோறும், உடல்மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துள்ளதாதலின், "பல என்று உரைக்கில் பலவே ஆம்" என்றார். 'ஒன்றெனப்பலவென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன்" என்று திருவாய் மொழி (2110) இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. கண்ணுக்குப் புலப்படாத அவ்விறைவனைக் காணப்படும் பரிதி, மதி போன்றவற்றைக் காட்டி "இதுவல்ல, இதுவல்ல" என்று சுட்டி அறிவிக்க வேண்டியிருப்பதால் "அன்றே என்னின் அன்றே ஆம்" என்றார். அப்பரமனின் இயல்பை, காணப்படும் பொருள்களான சூரியன், சந்திரன் போன்றவைகளின் ஒளி, குளிர்ச்சி ஆகியவை, பரம்பொருளின் இயல்பில் சிறிதளவே உடையதாயிருத்தலைச் சுட்டி, இதுபோன்ற பல கோடி மடங்கு ஒளியுடையவன் இறைவன் எனக் கூறி அறிவிக்கலாமென்பதால் "ஆமே என்னின் ஆமே யாம்" என்றார். கண்ணுக்குப் புலனாகாத தன்மையுடையது பரம்பொருள் என்பதால் "இன்றே என்னின் இன்றே யாம்" என்றார். ஆராய்ந்தறிந்த சான்றோர்களின் அனுபவ மொழிகளாலும், நூலறிவினாலும் பரம்பொருள் உண்டு என்பதை உணரலாமென்பதால் 'உளதென்றுரைக்கில் உளதேயாம்' என்றார். "உருவென அருவென உளதென இலதென, அருமறை இறுதியும் அறிவரு நிலையினை" எனத் திருவரங்கக் கலம்பகம் கூறுவது ஒப்பு நோக்கத்தக்கது. "உளனெனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள் உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வுருவுகள்" என்ற திருவாய் மொழி (2090) நினைவு கூரத்தக்கது. "நன்றே நம்பி குடிவாழ்க்கை" என்பது, உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறை நிலை உணர்வரிது என்றதிருவாய் மொழிக் கருத்தை (2100) உணர்த்தும். நன்று - பெரிது. "நன்று பெரிதாகும்" என்பது தொல்காப்பியம். பிழைப்பு: உய்யும் நெறி, நம்பி குடிவாழ்க்கை - இறைவன் நிலை. |