இந்த வாயிலின் உள்ளே இருப்பவர் வாயிலின்வழி பகைவர்கள் படைகள் உள்ளே நுழைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதுடன், தங்கள் படைகள் கோட்டைக்கு வெளியே சென்று போர் புரியவும் உதவுகின்றனர். வெளியே உள்ள படைகள், உள்ளே இருந்துவரும் படைகளை வெல்லவும், வாய்ப்பு நேர்ந்தபொழுது கோட்டையினுள்ளே புகவும் ஆயத்தமாக இருப்பர். |
இதனை மனத்தில் கொண்டு ஒவ்வொரு வாயிலின் உள்ளேயும், வெளியேயும் யார் யார் நிற்கின்றார்கள், அவர்கள் யாருடைய தலைமையின்கீழ்ப் பணிபுரிகின்றார்கள் என்றும் கம்பநாடன் பேசுகிறான். இலங்கையில் கிழக்கு வாயிலை எடுத்துக்கொண்டால் அதனுள்ளே இருந்து காக்கின்ற இராவணனுடைய படைகள் சேனைத் தலைவர்களின் தலைமையின்கீழ்ப்(6963) பணிபுரிகின்றனர். அப்பகுதியை வெளியே இருந்து முற்றுகை இடும் இராமன் படைகள், நீலன் தலைமையில் (6951), அமைந்துள்ளனர். தெற்கு வாயிலின் உள்ளே மகோதரன் தலைமையில் அரக்கர் படைகளும், வெளியே அங்கதன் தலைமையில் (6951), குரங்குப் படைகளும் உள்ளனர். மேற்கு வாயிலின் உள்ளே இந்திரசித்தன் தலைமையில் (6965) அரக்கர் படைகளும், வெளியே மாருதி தலைமையில் (6950) குரங்குப்படைகளும் உள்ளனர். வடக்கு வாயிலின் உள்ளே காவல் செய்யும் அரக்கர் படை இராவணன் தலைமையிலும் (6967), வெளியே உள்ள குரங்குப்படை இராமன் தலைமையிலும் (6952) போர் புரியத் தயாராக உள்ளனர். |
இலங்கையின் அமைப்பையும், இந்தியாவின் அமைப்பையும் புவிஇயல் அடிப்படையில் இன்று பார்க்கலாம். இராமேஸ்வரம் வழியாக உள்ளே புகுந்து குரங்குப் படைக்கு எதிரே, இலங்கையின் நடுவே இராவணன் கோட்டை அமைந்திருந்தது என்று சொல்வதில் தவறில்லை. ஒரே நேராக சேதுவின் வழி இலங்கையின் உள்ளே சென்று இறங்கிய குரங்குப் படைகள் கோட்டையை அடையும் வரை கவட்டையாகப் பிரிந்து செல்கின்றன. கவட்டையின் மேல் பகுதி வடக்கு வாயிலை நெருங்கியவுடன் அதன் ஒரு பகுதி கோட்டையைச் சுற்றிச் சென்று கீழ்த்திசை வாயிலை அடைகின்றது. இறங்குதுறையிலிருந்து கவட்டையாகப் பிரிந்ததில் கீழ்ப்பகுதி மேற்கு வாயிலை அடைகின்றது. |