உடையானை - கங்கையாறு பாயும் கோசல நாட்டுக்குரியவனான ராமனை; கண்டு நெஞ்சம் களிகூர- பார்த்து, மனம் மகிழ்ச்சி கொள்ள; அம் கைத் திரைகள் எடுத்து- அலைகளாகிய கைகளை எடுத்து; ஓடி ஆர்த்தது ஒத்தது -ஓடிவந்து வரவேற்பதை ஒத்தது; |
கொங்கைக் குயில் - கொங்கைகளை உடைய குயில் போன்றவளான சீதாபிராட்டி (இல்பொருள் உவமை) கோசலம் கங்கை நீரால் வளம் பெற்றுள்ளது என்பதால் "கங்கைத் திருநாடுடையான்" என்றார் தேவர்களின் குறை தீர, சீதாபிராட்டி சிறை புகுந்தாள் ஆதலால், சீதையின் துயர் தீர, தேவர்களின் குறை நீங்குமல்லவா? "குயிலைத் துயர் நீக்க இமையோர் உற்ற குறை முற்ற" என்றது கருதத்தக்கது. 'நீக்கி' என்று பாடம் கொண்டால் "துயர் நீக்கி, குறை முற்ற' என இயையும். சீதைத்துயர் தீர, தேவர் குறை தானே நீங்கும் என்பது தெளிவாகும். |
(10) |
6070. | இன்னது ஆய கருங் கடலை |
| எய்தி; இதனுக்கு எழு மடங்கு |
| தன்னது ஆய நெடு மானம், |
| துயரம், காதல், இவை தழைப்ப, |
| 'என்னது ஆகும், மேல் விளைவு?' என்று |
| இருந்தான், இராமன், இகல் இலங்கைப் |
| பின்னது ஆய காரியமும் |
| நிகழ்ந்த பொருளும் பேசுவாம்: |
|
இராமன் - இராமபிரான்; இன்னது ஆய கருங்கடலை எய்தி- இத்தகைய பெரிய தென்கடலை அடைந்து; தன்னது ஆய நெடுமானம்-தனக்கே உரிய பெரிய மானமும்; துயரம் காதல் இவை- துன்பமும், காதல் உணர்வும் ஆகிய இவை; இதனுக்கு ஏழு மடங்கு தழைப்ப -அந்தக் கடலை விட ஏழுமடங்கு வளர; மேல் விளைவு என்னதாகும்? - மேல் நடைபெற இருக்கும் செயல் என்ன தன்மைத்தாகும்; என்று நினைந்து இருந்தான் - என்று எண்ணியவனாய் கடற்கரையில் தங்கி இருந்தான்; இகல் இலங்கை - பகைவர் வாழுமிடமாகிய இலங்கையில்; பின்னது ஆய காரியமும் - அனுமன் போய் வந்தபின் நிகழ்ந்த காரியங்களையும்; நிகழ்ந்த பொருளும் பேசுவாம் - அதனால் நிகழ்ந்த பயன்களையும் இனிப் பேசுவோம். |
(11) |