| புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்- |
| நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான். |
|
முனைவரும் தேவரும் - (அரக்கர் அல்லாது) முனிவர்களும், தேவர்களும்; மற்றும் உள்ளோர் எனைவரும் - மற்றும் உள்ள அரக்கர்களின் வேறான மற்றவர்களும்; தவிர்க என- ஆலோசனை மண்டபத்தை விட்டு நீங்குக என்று; ஏய ஆணையான் - கட்டளை இட்டவனாய்; புனைகுழல் மகளிரோடு - அலங்கரிக்கப்பட்ட கூந்தலை உடைய பெண்களோடு; இளைஞர் போக்கினான் - அறிவு முதிர்ச்சி வறாத இளைஞர்களையும் மண்டபத்திலிருந்து போகச் செய்தவனாய்; நினைவுறு காரியம் - இராவணன் தான் நினைத்த காரியத்தை; நிகழ்த்தும் நெஞ்சினான் - நிகழ்த்தும் மனம் உடையவனான இராவணன்; |
முனைவர் -முனிவர்கள். முனிவரும், தேவரும் பகைப்புலத்தராதலின அவர்களை வெளியேற்றினான். பற்றற்றவர்களாதலின் நீக்கினான் எனினுமாம். பெண்கள் இரகசியத்தைப் பாதுகாக்க மாட்டார்கள் என்பதாலும், இளைஞர் அறிவு முதிர்ச்சி பெறாதவர்கள் என்பதாலும் அவர்களையும் வெளியேறச் செய்தான். பிறகு தான் நினைத்த காரியத்தை நிறைவேற்ற எண்ணியதால் மந்திராலோசனை நிகழுமிடத்தில் சிலரை நீக்கினான். மற்று உள்ளோர் - கின்னரர் கந்திருவர், கிம்புருடர், வித்தியாதரர் என்பவராவார். மகளிரும் இளைஞரும் மந்திராலோசனை மண்டபத்தில் இருக்கப் பெறாதாராவர். இதனை, |
"துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர், கன்றுசின மனத்தோர், கல்லாதவர், இளையோர் ஒன்றும் முறைமை உணராதவர், மகளிர் என்றுமிவர் மந்தணத்தின் எய்தப் பெறாதாரே" |
என்ற பாரதப்பாடலாலும் அறியலாம். (உத். கிரு. தூ: 52) |
(7) |
6078. | 'பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், |
| தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக் |
| கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால் |
| வண்டொடு காலையும் வரவு மாற்றினான். |
|
கொற்ற ஆணையான் - வெற்றிமிக்க ஆணைச் சக்கரத்தை உடைய இராவணன்; வண்டொடு காலையும் - வண்டுகளையும் காற்றையும் கூட; வரவு மாற்றினான் - ஆலோசனை |