பக்கம் எண் :


140காஞ்சிப் புராணம்


திருநெறிக் காரைக்காட்டுப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

மெய்த்தவர் யாவரும் அங்கது கேட்டு விழித்துணை நீர்வாரக்
கைத்தலம் உச்சி முகிழ்த்து மயிர்ப்புள கங்கள் மலிந்தயர்வார்
முத்தி பெறற்குயர் காரணம் இன்று தொகுத்து மொழிந்தனைநீ
அத்தல மேன்மை அனைத்தும் விரித்தரு ளென்றலும் அச்சூதன்.  1

     உண்மைத் தவமுனிவர் அனைவரும் காஞ்சி மான்மியத்தைக் கேட்டு
இருவிழிகளும் நீரைச் சொரியவும், கைகள் சிரமேற் கூம்பவும், மயிர்
சிலிர்ப்பவும், இவை மிகுந்து தம் வசமிழந்து ஆனந்த பரவசராய் முத்தியைப்
பெறுதற்குரிய உயர்ந்த காரணத்தை இப்பொழுது நீ தொகுத்துக் கூறினை
அத்தல மேன்மையை முற்றவும் விரித்துரைத் தருளுதல் வேண்டும் என்ற
அளவிலே அச்சூதமுனிவர்.

கச்சியுள் எண்ணறு தீர்த்தம் நிறைந்துள காமுறு பலதானம்
பொச்சமில் போகமும் வீடும் அளிப்பன போக்கரு மேன்மையவாம்
அச்சம் அறுத்து வியாதன் எனக்கருள் செய்த முறைப்படியே
இச்சையின் ஓதுவல் அந்தணிர் கேண்மின் எனச்சொல் லுற்றனனால்.
                                                   2

     காஞ்சிபுரத்தில் அளவில்லாத தீர்த்தங்கள் நிறைந்துள்ளன.
விரும்பப்படும் பல தலங்கள் பயன்கள் பொய்த்தலின்றிப் போகத்தையும்
வீடு பேற்றினையும் நல்குவனவாய்ச் சொல்லுதற் கரிய மேன்மையன ஆகும்.
அச்சம் தவிர்த்து வியாசர் எனக் கருளியவாறே விருப்புடன் ஓதுவேன்
அந்தணர்களே! நீவிர் கேண்மின் எனச் சொல்லத் தொடங்கினர்.

     போக்குதல்-உணர்த்துதல். ‘‘கரி போக்கினால்-சான்றால் உணர்த்தினால்,
போக்குதல், ‘நூலாற் போக்கினான்’ என்றாற் போல உணர்த்தன் மேற்று’
(சீவக.889.நச்) ‘இச்சையின் ஓதுவல்’ என்றமையால் இச்சையொடும்
கேண்மின்களென நினைவுறுத்தினர்.

இந்நக ரிற்புகல் சத்திய மாவிர தப்பெயரிற் குணபால்
தன்னிகர் மெய்த்தலம் ஒன்றுள தங்கமர் சத்திய விரதீசர்
என்னை யுடைப்பெரு மாட்டியும் ஓரிரு மைந்தரும் உடன்மேவ
மன்னி இருத்தலின் அத்தல மேன்மையை யாவர் வகுக்கவலார்.  3

     மேற்கூறிய சிறப்புக்களையுடைய காஞ்சியில் சத்தியமா விரதப்
பெயரொடு கிழக்கில் தன்னையே தனக் கொப்பதாய மெய்த்தலம் ஒன்றுள்ளது.
அங்கு விரும்பி வீற்றிருக்கின்ற பெருமான் என்னை அடிமையாகவுடைய
பெருமாட்டியும், ஒப்பற்ற மைந்தரிருவராகிய விநாயகப்பெருமானும்,
முருகப்பெருமானும் உடன் விரும்பி இருப்பத் தான் நிலைபெற இருத்தலினால்
அத்தலத்தின் பெருமையை யாவர் வகுத்துரைக்க வல்லவர். ஒருவரும் இலர்.