பக்கம் எண் :


277


     துர்க்கையும், ஐயனாரும், சூரியனும், வயிரவ மூர்த்தியும், விநாயகப்
பெருமானும் ஆகியோர் ஐவரும் கச்சபேசப் பெருமான் பொற்பாத
மலர்களைப் பூசனை புரிந்து உடன் வீற்றிருந்து தளர்ச்சியில்லாத
கணங்களொடும் அத்தலத்தைக் காவல் செய்வர்.

சத்தியமொழி விநாயகர் சிறப்பு

அந்தணீர் கச்சபே சக்குட, வைப்பினில் ஆயிதழ்க்
கந்தமா மலர்மிசைச் செல்விதன் கணவனார் போற்றிசெய்
துய்ந்தசத் தியமொழி விநாயகன் உளன்அவற் போற்றினார்
எந்தஊ றுந்தவிர்ந் திம்மையே வேட்டவை எய்துவார்.    13

     அந்தணீர்! கச்சபேசத் தலத்திடை மேற்றிசையில், கணந்தங்கிய
மலரிடை இருக்கும் திருமகள் நாயகன் வழிபாடு செய்து நலம் பெற்ற
சத்தியமொழி விநாயகர் கச்சபேசத் தலத்திடை மேற்றிசையில் எழுந்தருளி
யுள்ளனர். அவரைப் போற்றுதல் புரிந்தோர் எவ்வகை இடையூறுகளும்
நீங்கி இப்பிறப்பிலே விருப்பியவற்றை அடைவார்.

கச்சபேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-901

சகோதர தீர்த்தப் படலம்

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     வெள்ளிக்குப் பாயம் போர்த்தெனப் பொதிந்த வெண்டிரு
நீற்றொளிக் கதிர்கள், அள்ளிக்கொள் வனைய மேனியீர் கச்சபாலயம்
அறைந்தனம் மலநோய், தள்ளிப்பே றுதவும் அத்தலக் குடபால்
சகோதர தீர்த்தநீர்க் கரையில், புள்ளித்தோ லாடை புனைந்தநம்
பெருமான் பொலிவுறும் இருக்கைகள் மொழிவாம்.

     வெள்ளிச் சட்டையைப் போர்வையாகக் கொண்டால் அனைய
பொதியப் பூசிய வெள்ளிய திருநீற்றின் ஒளியுடைக் கதிர்கள் அள்ளிக்
கொள்ளலாம்படி விளங்கும் திருமேனியை யுடையீர்!  கச்சபாலயத்தின்
பெருமையைக் கூறினோம். அத்தலத்திற்கு மேற்கில் ஆணவ மலத்தினால்
ஆகும் பிறவி நோயைச் சாய்த்து வீடுபேற்றினை அருளும் சகோதர தீர்த்தக்
கரையில் புள்ளிகளையுடைய மான்தோலை உடையாகப் புனைந்த நம்முடைய
பெருமான் வீற்றிருக்கும் தலங்களைக் கூறுவாம்

     கச்சப+ஆலயம்=கச்சபாலயம். ஆமை உருக்கொண்ட திருமால்
பூசித்தமையின் அப்பெயர் எய்தியது. ‘‘புள்ளித்தோலாடை புனைந்தரனை’’
(திருவிளை. இந்தி.)