பக்கம் எண் :


328காஞ்சிப் புராணம்


வீர ராகவேசப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

புத்தருக் கிறையும் நல்யாழ்ப் புலங்கெழு முனியும் போற்ற
அத்தனார் இனிது வைகுங் கயிலையின் அடைவு சொற்றாம்
இத்தகு வரைப்பின் கீழ்பால் இளநறாக் கொப்பு ளித்துத்
தொத்தலர் பொழில்சூழ் வீர ராகவஞ் சொல்ல லுற்றாம்.     1

     புத்தர் தலைவரும், மகதியாழுக்குரிய அறிவு கெழுமிய நாரத
முனிவரும் வழிபாடு செய்யச் சிவபெருமானார் இனிது விளங்கும் கயிலாயத்
தலத்தினது வரலாற்றைக் கூறினோம். இத்தலத்திற்குக் கிழக்கில் செவ்விய
தேன் கிளைத்துக் கொத்துக்களில் வைத்து மலர்கள் விரிகின்ற சோலை
சூழ்ந்த வீரராகவேசத்தின் வரலாற்றைக் கூறுவாம்.

     கெழு-பொருந்துத லென்னும் பொருளையுடைய தொருசாரியை,
ராகவன்-ரகுமரபில் வந்தவன்,

இராமன் முறையிடல்

ஒன்னலர் குருதி மாந்தி ஒளிறுவேல் இராமன் என்பான்
தன்மனைக் கிழத்தி தன்னைத் தண்டக வனத்து முன்னாள்
கொன்னுடைத் தறுகண் சீற்றக்கொடுந்தொழில் அரக்கன் வௌவித்
துன்னரும் இலங்கை புக்கான் மேல்வரு துயரம் நோக்கான்.    2

     பகைவருடைய செந்நீரை நிரம்பப் பருகி ஒளிவிடும் வேலையுடைய
இராமன் என்று சிறப்பித்துப் பேசப்படுவோன் தனது மனையறங்காக்கும்
உரிமை யுடைய சீதாபிராட்டியைத் தண்டகாரணியத்தில் முன்னாளில்
பிறர்க்கு அச்சந்தருதலையுடைய அஞ்சாமையையும், சினத்தையும் தீய
செயலையும் உடைய அரக்கனாகிய இராவணன் கவர்ந்து பின் விளையுந்
துன்பத்தை எண்ணானாகிப்பிறர் நெருங்குதற்கரிய இலங்கைக்குச் சென்றனன்.

பெய்கழல் கறங்கு நோன்தாள் பெருவிறல் இராமன் அந்நாள்
எய்சிலைத் தம்பி யோடும் இடருழந் தழுங்கி ஏங்கிக்
கொய்தழை வனங்கள் எங்குங் கொட்புறீஇக் கமல வாவிச்
செய்புடை யுடுத்த காஞ்சித் திருவளர் நகரஞ் சேர்ந்தான்.   3

     வீக்கிய கழல் ஒலிக்கின்ற வலிய தாளும் பேராற்றலும் உடைய இராமன்
அந்நாளில் அம்பை எய்கின்ற வில்லேந்திய தம்பி இலக்குவனோடும்
துன்பப்பட்டு வருந்தி இரங்கிக் கொய்கின்ற தழையையுடைய காடுகளில்
எவ்விடத்தும் சுழன்று தாமரைப் பொய்கையையுடைய வயல்சூழ்ந்த
திருத்தங்கு காஞ்சி மாநகரைச் சேர்ந்தனன்.