பக்கம் எண் :


பரசிராமேச்சரப் படலம் 467


     ‘‘தொகுதி கொண்ட வெள்ளிய கதிரொளி வீசி இருட் குழாத்தினை
அறுக்கும் வெற்றியையுடைய திங்கட்கிழமை முதலாம் நாள்களில்
‘பரசிராமேசர்’ எனப் பெயர் பூண்டு விளங்கும் இச்சிவலிங்கத்தினைப்
பணிந்து மெய்யன்பர்க்குத் தம்மால் இயன்ற அளவிற் பொருளைத் தானம்
அந்நாளிற் கொடுப்பவர் போக மோட்சங்களைப் பெறுக.”

எனவேண்டி வணங்கி வணங்கி எழுந்த காலை
முனிவன்றனக் கவ்வரம் முற்றும் வழங்கி மூரிப்
பனிமால்வரை நல்கிய பைந்தொடி மைந்தரோடும்
அனல்அங்கைகொள் அண்ணல் கரந்தபின் அங்கண் நீங்கி.   60

     எனக் குறையிரந்து பல முறையும் வணங்கி எழுந்தபொழுதில் பெருமை
பொருந்திய இமயவல்லியாரொடும் திருமைந்தரோடும் சிவபெருமானார்
அப்பரசிராமர்க்கு வரங்களை அருள் செய்து மறைந்த பின்னர் முனிவரர்
அங்கு நின்றும், போய்,

முனிவன்முனி வன்மழு வான்மணி மோலி வாய்ந்த
சினவெம்படை வேந்தர் தமைச்செரு விற்படுத்துக்
கனலன்ன செழுங்குரு திக்கய நீர்இறைத்திட்
டினமன்னு பிதிர்க்கடன் ஆற்றிமெய் இன்ப முற்றாண்.   61

     முனிவர் முனிந்து கொல்கின்ற வலிய பரசாயுதத்தால் மணிமுடிகளை
அணிந்த கொடுஞ்சினமும் படையுமுடைய அரசர்களைப் போர்க் களத்தில்
கொன்று நெருப்பினை ஒக்கும் நிறமுடைய இரத்தத்தைக் குளமாகத் தேக்கித்
தென்புலத்தார்க்கு நீர்க்கடனை அச்செந்நீரால் ஆற்றி உண்மையே இன்பம்
எய்தினர்.

அப்பொற்பின் அருட்சிவ லிங்கம்மெய் யன்பின் அங்கண்
எப்பெற்றிய ரேனும் இறைஞ்சின் இறைஞ்சு முன்னர்க்
கைப்பட்டதோர் ஆமல கக்கனி போல வீடும்
செப்பற்கரி தாகிய செல்வமும் எய்தி வாழ்வார்       62

     பொலிவுடன் அருள் செய்கின்ற அப்பரசிராமேசப் பெருமானை
உண்மையன்புடன் எத்திறத்தராயினும் அவ்விடத்து வழிபாடு செய்வரேல்
வழிபடு முன்னரே கையிடத்ததோர் நெல்லிக்கனியென ஐயமின்றிச்
சொல்லுதற்கரிய பெருஞ்செல்வ வளத்துடன் வீடு பேற்றினையும் பெற்று
வாழ்வார்.

பரசிராமேச்சரப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 1573