பக்கம் எண் :


491


இறவாத் தானப் படலம்

கலிநிலைத் துறை

புள்ளி வண்டு பெடையொ டாடிப் பொங்கரிற்
பள்ளி கொள்ளும் பிறவாத் தானம் பன்னினாம்
துள்ளி வாளை பாயும் நீர்சூழ் இதன்அயல்
வெள்ளி வரையார் இறவாத் தானம் விள்ளுவாம்.    1

     புள்ளியுடைய ஆண் வண்டு பெண் வண்டுடன் கூடிச் சோலையிற்றுயில்
கொள்ளும் பிறவாத்தானத்தை ஆராய்ந்து கூறினோம். இனி, வாளை மீன்கள்
துள்ளிப் பாய்தற் கிடனாகிய நீர் சூழ்ந்த இதன் மருங்கே கயிலைமலையார்
எழுந்தருளியிருக்கும் இறவாத்தானத்தை விளம்புவேம்.

இறவிக் கஞ்சிச் சிஃறா பதர்கள் மாதவம்
முறையிற் செய்தார் முன்னாள் அந்நாள் முன்னுற
நறவில் திகழும் முளரி மேலோன் நண்ணிநின்
றறவர்க் கென்னே வேட்ட தென்றான் ஆங்கவர்.    2

     முன்னாளில் முனிவரர் சிலர் இறப்பை அஞ்சிப் பெருந்தவத்தை
விதிப்படி இயற்றினர். அப்பொழுது தேனொடு திகழும் தாமரைத் தவிசினோன்
எதிருறத் தோன்றி‘அறவோரே! நீவிர் விரும்புவரம் என்’ என வினவினான்.
அங்கவரும்,

உலக முழுதும் உதவும் எந்தாய் உன்னடித்
தலமே யன்றிச் சரணம் இல்லேம் சாவதற்
கலகில் அச்சல் உற்றேம் அதனை வெல்லுமா
றிலக எங்கட் குரையாய் என்றங் கேத்தினார்       3

     ‘உலக முழுதையும் சிருட்டிக்கும் மண் பொதுத் தந்தையே! உன்னடித்
துணை அல்லாது வேறு புகலிடம் இல்லேம். இறப்பினுக்கு அளவு படாத
அச்சமுடையோம். அதனை வெல்லும் உபாயத்தை விளங்க எங்களுக்கு
உணர்த்தவேண்டும்’ எனப் போற்றினர்.

செங்கால் அன்னப் பாகன் கேளாத் தேத்துணர்க்
கொங்கார் பொங்கர்க் காஞ்சி நண்ணிக் கோமளை
பங்கார் ஆதி பகவன் பாதம் வழிபடின்
அங்கே இதனைப் பெறலாம் என்றான் அவர்களும்.     4

     சிவந்த கால்களையுடைய அன்னத்தை ஊர்தியாகவுடைய பிரமன்
கேட்டுத் தேன் பொருந்திய பூங்கொத்துக்களின் மணமருவிய சோலை சூழ்
காஞ்சியை நண்ணி உமையம்மையாரைப் பங்கிலுடைய ஆதிபகவனாருடைய
திருவடிகளை வழிபாடு செய்தால் நீங்கள் விரும்பிய அதனை அவ்விடத்தே
பெறலாகும்’ என்றனன். அம்முனிவரரும்,