பக்கம் எண் :


இராவண காவியம் 115

   
         93.     அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே
                 பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில்
                 இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம்
                 திருந்திய சிற்றூ ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா.

         94.      பேரர சதன்கீழ் மூன்று பெருந்திற லரசு மந்தச்
                 சீரர சதன்கீழ்ச் செங்கோற் றிருவமர் நாடும் நன்னாட்
                 டாரர சதன்கீழ்ச் சீறூ ரரசுமாங் கமைந்து மக்கட்
                 சாரர சுரிமை பூண்டு தமிழகம் பொலிந்த தம்மா.

         95.      எழுநிலை மாடக்கூடத் தியன்றகல் தெருவந் தாங்கி
                 நழுவிலா வளங்கள் மேவி நலவழிப் படிவீ டெல்லாம்
                 வழிவழி பெருகி மக்கள் வாழ்வதற் கேற்ற வாறு
                 பழமரச் சோலை சூழ்ந்து பசந்திருந் தனசீ ரூரே.

         96.      இன்னபல் வளத்த தாகி யியற்கையி னியல்பி யாவும்
                 மன்னிய குறிஞ்சி முல்லை வளமிலி மருத நெய்தல்
                 அந்நெறி யமைந்த செல்வத் தைந்நிலக் கிழமை தாங்கித்
                 தன்னிக ரிலாத மேன்மைத் தமிழகம் பொலிந்த தம்மா.

         97.      ஐம்பெருங் கண்ட மாவின் றமைதரு முலகில் வாழும்
                 வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த்
                 தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால்
                 இம்பரி னிதனுக் கீடொன் றிதுவலாற் பிறிதொன் றுண்டோ!
 
3. மக்கட் படலம்
வஞ்சி விருத்தம்
 

         1.       அத்த மிழகத் தாய்தரும்
                 முத்த மிழ்த்துறை முற்றிய
                 மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப்
                 புத்து ணர்வுறப் போற்றுவாம்.

         2.       முன்னு மில்லற முற்றியே
                 தன்ன லங்கள் தவிர்த்துமே
                 இன்ன லஞ்செய் திசைபெறும்
                 அன்ன ரேதமி ழந்தணர்.
------------------------------------------------------------------------------------------
         96. வளமிலி - பாலை 2. முன்னுதல் - பொருந்துதல்