பக்கம் எண் :


இராவண காவியம் 239

   
8. அரசியற் படலம்
 
கலித்துறை
 
        1.      ஐய நுண்ணிடை யழகியு மழகனுங் கூடிச்
               செய்ய வேண்டிய செய்துநஞ் சேயனை யீன்று
               வைய மாக்கிய மனையறச் சிறப்பினை வகுத்தாம்
               ஐயன் செய்யகோ லரசியற் சிறப்பினை யறைவாம்.

        2.      முறையு மின்சொலு மீகையு முனைப்பொடு முயலும்
               பொறையுங் குற்றமில் லாமையஞ் சாமையும் புரப்போர்
               குறையை நீக்குமெண் காட்சியுங் குளிர்மையே முதலா
               இறையெ னும்பெயர்க் கேற்றவா றிருந்தன னிறைவன்.

        3.      இயற்றி யொண்பொருள் வரும்வழி களையவற் றீட்டி
               முயற்சி யோடவை காத்தவை முறையொடு குடிகள்
               செயற்றி றம்பட வகுத்துமே செந்தமிழ்ப் பொருணூல்
               பயிற்று நன்னெறி பயிற்றியே பெரும்புகழ் படைத்தான்.

        4.      ஆய காலமோ டிடன்வலி முதலன வறிந்து
               தூய ராய்ச்செயும் வினைக்குரி யார்களைத் துணிந்தே
               ஏய வவ்வினைப் பயனையு மியல்புற நாடி
               மேய நல்வினை புரிந்திடும் வினைவலி மிக்கான்.

        5.      அறிவின் மிக்கநல் லமைச்சரைச் சூழ்ந்துய ரொற்றால்
               அறிய வேண்டிய வறிந்துநன் காய்ந்தற நெறியின்
               மறதி சோம்பலை மருந்துக்கு மறந்திடா வகையில்
               முறைபு ரந்தனன் றமிழக முழுவது முறையோன்.

        6.      இயன்ற மட்டிலு மிராவண னெனும்பெயர்க் கேற்பப்
               பயின்று மக்களெல் லோருமுப் பெரும்பொருட் பயனை
               இயன்று பேதைமை யிருள்கெட வறிவொளி யெய்த
               முயன்று நாடொறுந் தமிழ்க்குலம் விளக்கிடு முதல்வன்.
-------------------------------------------------------------------------------------------
        2. முனைப்பு - ஆண்மை. எண் - எளிமை. 6. முப்பொருள் - அறம்பொரு ளின்பம். இயன்று - பொருந்தி. இராவணன் - பேருரிமையுடையவன். (குல) விளக்குப் போன்றவன். இராவணம் - விளக்கு. பேருரிமையுடையவன் என்பதற் கேற்பப் பயனைப் பொருந்தவும், குலவிளக்குப் போன்றவன் என்பதற்கேற்ப இருள் கெட அறிவொளி எய்தவும் முயன்று தமிழ்க் குலத்தை விளக்குபவன்.