பக்கம் எண் :


256புலவர் குழந்தை

   
3.3. விந்தக் காண்டம்
 
1. விந்தப் படலம்
 
கலி விருத்தம்
 
        1.      அரசரும் புலவரு மமைச்சு மண்ணலும்
               அரசிய லாய்ந்தத னமைவு கண்டனம்
               உரைசெயு மிக்கதைக் குறையு ளாகிய
               விரைசெறி மரமடர் விந்தங் காணுவாம்.

        2.      மல்லலந் திராவிட வடக்குப் பாங்கரில்
               வல்லமர் விந்தமா மலைத்தென் சாரலில்
               வல்லியு மரங்களு மாவும் புட்களும்
               புல்லிய பெருநிலம் பொருப்பி னின்றது.

        3.      அப்பெரு நிலந்தனக் கரண மாகவும்
               எய்ப்படு மதன்வடக் கெல்லை யாகவும்
               மைப்படு முயரிய வானின் றூணென
               மெய்ப்படு மப்பெரு விந்தம் நின்றது.

        4.      மிடைதரு வளத்தவவ் விந்த மாமலை
               குடகடல் முடியுறக் குணக்கு றுங்கடல்
               அடியுற விடம்பெயர்ந் தகற லின்றியே
               படுதுயில் கொளுமலைப் பாம்பு போலுமே.

        5.      உள்ளுவந் திவறிடா தீயு மொண்டமிழ்
               வள்ளல்கள் போல்வரை யாதம் மாமலை
               கொள்ளு வான்புனல் கொடுத்துக் கொள்கென
               நெள்ளுற வப்பெரு நிலத்தை யோம்புமால்.

        6.      களந்தரு காதலர் கண்ட காட்சிபோல்
               உளந்தரு பாவலர் உணர்வின் மாட்சிபோல்
               குளந்தரு கால்வியங் கொள்ள வுள்வயல்
               வளந்தரு வளமெலாம் மலிந்த வந்நிலம்.
-------------------------------------------------------------------------------------------
        1. விரை - மணம் 2. மல் - வளம். வல் - வலி, மேடு. வல்லி - கொடி. 3. எய்ப்படல் - நிலையாதல். 5. நெள்ளுறல் - நெகிழ்தல், வளமாதல்.