பக்கம் எண் :


282புலவர் குழந்தை

   
4. மகப்பெறு படலம்
 
அறுசீர் விருத்தம்
 
        1.     மாகயற் கண்ணி செல்வ மனைப்பெருங் கிழத்தி வாகைக்
              கேகயன் செல்வி யான கிளிமொழிப் பாவை யோடும்
              தோகைகோ சலையி னோடும் சுமத்திரை யொடுமற் றுள்ள
              பாகெனு மொழியா ரோடும் பயனுகர்ந் திருந்தான் மன்னன்.

        2.     ஒள்ளிலை வேலான் மாத ரொடுதிளைத் துலவா வின்பங்
              கிள்ளியே நுகர்ந்து தொண்டுக் கிழவனா கியுமே யன்னான்
              கள்ளவிழ் குழலார் காமக் களிப்பிய ரொருத்திக் கேனும்
              பிள்ளைக ளில்லா தன்னான் பெருந்துயர்க் கடலு ளாழ்ந்தான்.

        3.     சொற்றிறம் பழுத்து மூத்த சுமந்திரன் என்பா னோடும்
              மற்றைய வமைச்ச ரோடுங் குலகுரு வசிட்ட னோடும்
              முற்றிய சூழ்ச்சி வல்ல முதியரே எல்லாப் பேறும்
              பெற்றுளே னேனும் பிள்ளைப் பேறது பெற்றி லேனே.

        4.     பொன்னுள ரேனு மற்றைப் பொருளுள ரேனும் பின்னர்
              என்னுளர் பிள்ளை யில்லா ரெனுமுது மொழிபொய் யாமோ
              முன்னுள துன்ப மெல்லாம் முறையொடு போக்கி யின்பம்
              இன்னிளஞ் சிறுவ ரல்லால் யாவரே கொடுக்க வல்லார்.

        5.     உண்ணும்போ துவப்பையூட்டு முறுபொரு ளில்லை யென்றுள்
              எண்ணும்போ துவப்பையூட்டு மிளைத்துடல் களைத்து வேலை
              பண்ணும்போ துவப்பை யூட்டும் பகையிடத் தாழ்ந்து சீற்றம்
              நண்ணும்போ துவப்பை யூட்டும் நற்பொருள் மக்க ளன்றோ.

        6.     மக்கள்மெய் காண்டற் கின்பம் மழலைச்சொற் கேட்டற் கின்பம்
              மக்கள்மெய் யதைமுத் தாடி வகைபடச் சுவைத்தற் கின்பம்
              மக்கள்மெய் தீண்டற் கின்பம் மருமண முகர்தற் கின்பம்
              மக்களைம் புலனுக் கின்பம் வழங்கியே மயக்கு வாரே.

        7.     தோள்வலி யாலே வேண்டுந் தொகுவளந் திரட்டி யொன்னார்
              வாள்வலி யதனை யோட்டி மன்பதை காவா நின்றேன்
              ஆள்பவ ரின்றி விட்டே யகன்றனன் எனுஞ்சொல் லேகக்
              கேள்வியில் வல்லீர் நல்லீர் கிளக்குவீ ரெனவே மன்னன்.