பக்கம் எண் :


இராவண காவியம் 301

   
         30.   வேள்வி காத்திட வேயலான் ஆரிய வேந்தர்
              ஆள்வ லத்துட னடைதரா ராகையா லவரைத்
              தாள்வ லத்துடன் தமிழகம் புகாவகை தடுத்து
              வாள்வ லத்துடன் காக்குவீ ரெனவிடை வழங்க.

         31.   பரம்பு புல்லிய படைவலான் சரியென வணங்கி
              நரம்பு புல்லிய மறத்தமிழ்ப் படையொடு நடந்தே
              கரும்பு முல்லையு மருவியுங் குறிஞ்சியுங் கடந்தே
              அரும்பு புல்லிய சோலைசூழ் விந்தக மடைந்தான்.

         32.   அடைந்த மாப்படைத் தலைவனை யரசியு மன்பாய்
              அடைந்து நல்வர வேற்றிட வேகரன் அமைத்த
              இடந்தொ றுந்தமிழ்க் கூறுசெய் யாரிய ரென்னும்
              படர்ந்த முட்புத ரகற்றியே காத்தனர் பரிவாய்.

         33.   நண்ணு மப்புதுப் படையொடு விந்தநன் னாட்டின்
              திண்ணி யபழம் படைகொடு திறலொடு கரனும்
              உண்ணு மாரிய ரெண்ணம தோவுறும் வண்ணம்
              கண்ணி னையிமை காப்பபோல் அங்ஙனம் காத்தான்.

         34.   புலைபு ரிந்துணும் பூரிய ஆரியப் புல்லர்
              கொலைபு ரிந்துண வேட்டிட வாயிடைக் குறுகின்
              அலைபு ரிந்திடு வாரென வஞ்சியே யணுகா
              நிலைபு ரிந்தொரு குடைநிழ லோம்பினள் நெடியாள்.

         35.   கொடிய வெங்கொலை காணிலா தாரியக் குறும்பை
              உடைய வாரியக் கொலைக்கள வேள்விசெய் துண்போர்
              அடியு றாதிள வரசியாந் துணையுட னாடுங்
              கொடிநு டங்கிடப் பொலிந்தனள் விந்தமென் கொடியே.
 
7. மிதிலைப் படலம்
 
கலி விருத்தம்
 
         1.    தாடகை யெனுந்தமிழ்க் தாயைக் கொன்றவர்
              காடடர் விந்தகங் கடந்து வானுயர்
              மாடமுங் கூடமு மலியும் பல்வகை
              வீடமர் கொடித்தெரு மிதிலை கண்டனர்.
-------------------------------------------------------------------------------------------
         31. நரம்பு புல்லிய - வலிபொருந்திய.