பக்கம் எண் :


இராவண காவியம் 353

   
4. பழிபுரி காண்டம்
 
1. உருக்குலை படலம்
வஞ்சி விருத்தம்
 
           1.  அருட்க ருத்தறி யாதவன்
              வெருக்கொ ளச்செவி மேயவர்
              மருக்கு ழற்காம வல்லியை
              உருக்கு லைத்தமை யோர்குவாம்.

           2.  செந்த தமிழ்மொழிச் செல்வியும்
              சந்த மேய தடம்பொழில்
              விந்த நாடதை மென்புடை
              முந்தை யோரின் முறைசெய்தாள்.

           3.  மைவ ளர்குழல் மங்கையின்
              ஐவ ளர்படை யாளனாம்
              மெய்வ ளர்மிடல் மேவிய
              கைவ லகரன் காப்பினே.

           4.  மடங்க லன்ன மறவர்கள்
              இடந்தொ றுஞ்சென் றிருந்துமே
              அடங்க விந்த வகந்தனை
              உடங்க லின்றியே யோம்பினர்.

           5.  தாயி னன்ன தமிழர்கள்
              தாயி னன்ன தமிழ்மகள்
              ஆயி னன்ன ரளிக்கவே
              சேயி னன்னர் சிறந்தனர்.
-------------------------------------------------------------------------------------------
           3. ஐ - மேன்மை, தலைமை. மிடல் - வலி. 4. மடங்கல் - சிங்கம். உடங்கல் - குறை. 5. நன்னர் - நன்மை, நலம்.