பக்கம் எண் :


இராவண காவியம் 463

   
அறுசீர் விருத்தம்
 
          74.   என்றலுந் தமிழர் வாழ்வுக் கிலக்கண மாக வுள்ளோன்
               குன்றன குவவுத் தோளாற் குழந்தையை யிறுகப் புல்லி
               உன்றனை மகனாப் பெற்றேற் குறுகுறை யுண்டோ மைந்தா
               வென்றியி னுவந்தே னூங்குன் வெஞ்சின மதனைக் கேட்டே.

          75.   போரென வுவந்து போரிற் புலியெனப் புகுந்து முற்றும்
               ஆரிய வினமான் கற்றை யழித்துமீள் குவையென் மைந்த
               யாருனக் கெதிரில் நிற்றற் கருமுர ணுடையார் மண்ணில்
               வீரநின் றோற்றங் காணின் வெருக்கொளாப் பகைவ ருண்டோ.

          76.   தும்பியந் தொடையல் மார்ப தொகுபனிப் படலம் வானில்
               வெம்புவெங் கதிரின் முன்னர் மிடலொடு நிற்ற லுண்டோ
               நம்பியுன் றோற்றங் கண்டால் நன்றிலா வடவர் சும்மை
               அம்பினைக் களைக ணாக்கி யலறியே யோடு மன்றோ.

          77.   இன்னன பலவுங் கூறி யிறையவன் மகனை வாழ்த்தி
               இன்னையே தும்பை சூடி யிகலரை யழித்து மீள
               மன்னிய தறுகண் வாய்ந்த மறவரைத் தொகுத்தி ரென்னத்
               தன்னிக ரில்லாத் தானைத் தலைவருக் காணை யிட்டான்.

          78.   தருக்கொடு தலைவ னாணை தனைமுடித் தலையிற் றாங்கிப்
               பொருக்கென வெழுந்து தானைத் தலைவர்கள் புலியிற் போனார்
               இருக்கைவிட் டெழுந்தெ லாரு மிறைவனை வணங்கிப் போனார்
               மருக்குலா மாலை மார்பன் மதிவலார் தம்மைப் பார்த்தே.

          79.   பாவிகள் தமையின் றோடு பழந்தமி ழகத்தில் லாமல்
               ஓவிலா தொருவரேனு மொழித்துமே வென்றிகாணற்
               காவன புரிதி ரென்ன வனுப்பியே தமிழர் கோவும்
               தேவியோ டெழுந்து சென்று திகழ்மணிக் கோயில் புக்கான்.
 
3. அடிமைப் படலம்
 
          1.    பேரவை கூட்டி யண்ணல் பெருந்தமி ழிலங்கை முற்றும்
               ஆரியர் செயலைப் பற்றி ஆய்ந்ததோ ராய்வு கண்டாம்
               பேரர சடைய வேண்டிப் பீடணன் எனப்பேர் பெற்ற
               பூரியன் வடவன் றன்னைப் புகலடைந் ததனைக் காண்பாம்.

-------------------------------------------------------------------------------------------
75. கற்றை - தொகுதி. அருமுரண் - மிக்க வலி. 76. சும்மை - கூட்டம். களைகண் - ஊன்றுகோல். 77. தறுகண் - அஞ்சாமை. 78. மருகுலாம் - மணம் பொருந்திய.