பக்கம் எண் :


466புலவர் குழந்தை

   
          16.   அறத்தினைக் காப்போ னென்ன அனுமன்முன் னெடுத்துச் சொன்னான்
               மறத்தினை யுடையா னோடு வாழ்வதிற் பகைவ னாகி
               இறத்தலே தகுதி யென்ன வெய்தினே னண்ணால் என்னைத்
               துறத்தலும் புரத்த லுந்நின் றுணிவினைப் பொறுத்த தாகும்.

          17.   தன்னிக ரில்லா வைய தமிழரை வெலவுந் தாவில்
               நன்னலம் பொருந்தி லங்கை நகரினை யழிக்க வுந்தான்
               என்னுயி ருள்ள மட்டு மியன்றதோ ருதவி செய்வேன்
               என்னையோர் பொருளா வெண்ணி யேவல னாக்கிக் கொள்வாய்.

          18.   என்றவ னிருகை கூப்பி யேத்தியே தொழுது நிற்கக்
               குன்றெனத் திரண்ட தோளான் கொடுங்கையா லணைத்துப் புல்லி
               இன்றிருந் திலங்கைச் செல்வ மெம்பினா னுனக்குத் தந்தேன்
               சென்றுநீ யிலங்கை வேந்தாய்ச் சிறப்பொடு வாழ்தி யென்ன.

          19.   அடிமைகொண் டவனைப் போருக் கருந்துணை யாகக் கொள்ளக்
               கடிதினிற் றம்பி தன்னாற் கடலினீர் கொணர்ந்து பெய்து
               முடிபுனைந் திலங்கை வேந்த னாக்கியே முறையொன் றில்லாக்
               கொடியவ னினகொள் ளார்தேங் குறித்தகொற் றங்கொண் டானே.

          20.   நன்றிலான் றுணையாய் வந்த நால்வருக் குரிய கூறி
               வென்றிவேல் மன்னர் மன்னன் மேதகு பெருமை கேட்டுச்
               சென்றெதிர் காலை முற்றச் செய்ம்மெனப் பணித்தி ருந்தான்
               ஒன்றிய பழியோர் செய்த உளவினை யறிதல் காண்பாம்.
 
4. உளவறி படலம்
 
கலி விருத்தம்
 
          1.    பெரியரோடு மரியதானைப் பெரியரோடு மறைமொழிக்
               குரியரோடு முறவினோடு மொழிவெதிர்வு நிகழ்வினைத்
               தெரியரோடு மருவியாய்ந்து சென்றதென் னிலங்கைமன்
               கரியகூந்த லிறைவியோடு கழறியாங் கிருக்கையில்.
-------------------------------------------------------------------------------------------
          16. மறம் - பாவம். புரத்தல் - காத்தல். 19. இன - இவ்வாறு. கொள்ளார் தேம் குறித்த கொற்றம் - கொள்ளு முன்னே அயலார் நாட்டை இன்னொருவனுக்குக் கொடுத்தல். (புறத்-21-1) 1. மறை - ஆய்வு. மறைமொழிக்குரியர் - அமைச்சர் ஒழிவு எதிர்வு நிகழ்வு தெரியர். முக்காலத்தையும் ஆராய்ந்தறிபவர்; அறிவர்.