பக்கம் எண் :


இராவண காவியம் 501

   
        23.   உள்ளம் துடையே லைய உறுதியாய் நாளை வென்றி
             கொள்ளுவம் நானே யந்தக் குறியனைக் கொல்வே னென்றவ்
             வள்ளலுந் தேற்றத் தேறி வடவனும் பள்ளி புக்கான்
             புள்ளின மொலிப்ப வானம் புலர்ந்தது புலரி காண்பான்.
 
9. இரண்டாம் போர்ப் படலம்
 
        1.    இருண்டபே ரிருளை நீக்கி யிளங்கதிர்ச் செல்வன் றுப்பிற்
             றிரண்டுமே பொருது வென்று சென்றவர் போக மண்ணிற்
             புரண்டுமே யுயிரை நீத்துப் போனமா மறவர்க் கின்றோ
             டிரண்டுநா ளாயிற் றென்ன வெண்ணுவான் போல வந்தான்.

        2.    கதிரவன் றோன்றா முன்னங் கடுந்திறல் மறவ வெள்ளம்
             கதுமென வெழுந்து போந்து களத்திடைப் பரந்த தாங்கே
             அதிர்குரல் முரசஞ் சங்க மருந்துடி பதலை காளம்
             முதிர்கிணை முழவ மற்றும் முகிலென முழங்கிற் றம்மா.

        3.    முந்தைநாள் முழுது மாவல் முடிகுற மிதக்க வுண்டு
             சந்தைபோ லொருவிச் சென்று சலிப்பினை யிரவுக் கீந்து
             குந்துகால் விலங்கும் புள்ளுங் கூடியே கிளையி னோடு
             வந்துவாய் திறந்து போரின் வருகைபார்த் திருந்த மாதோ.
 
இராவணன்
 
        4.   முன்னைநாட் போன்றே மள்ளர் முனைப்புலம் படர்ந்து மொய்த்தார்
             தன்னிகர் தானே யான தமிழர்தந் தலைவன் றானை
             மன்னர்மூ வரையங் கேவ வரிசையாய்ப் பொருதே யன்னார்
             இன்னலுற் றழியப் பொங்கி யிறைமகன் களம்புக் கானே.

        5.    வெங்களி றுழக்கப் பாய்மா விரைவொடு குழைக்க திண்டேர்க்
             கங்குருள் கலக்கச் சூரர் கழலடி மிதிப்பச் சேறாய்
             அங்குறை யுறுத்தச் சேறா ரமைப்புறுங் களத்தி னூடே
             பொங்கொளி மணித்தே ரூர்ந்து புகுமிரா வணனைக் கண்டே.

        6.    யாரென வடவன் கேட்ப வண்ணலுக் கிளைய பாவி
             வீரவென் றமைய னென்ன விழுப்புக ழுடையன் போலும்
             யாரிவ னொளிக்கொப் பாவ ரையகண் கூசு கின்ற
             பாருநண் பகலிற் றோன்றும் பருதிபோல் விளங்கு கின்றான்.
-------------------------------------------------------------------------------------------
        23. குறியன் - சேயோன். வள்ளல் - சுக்கிரீவன். புலரி - ஞாயிறு புலரி காண வானம் புலர்ந்தது. 2. பதலை - துடுமம். காளம் - கொம்பு. 5. கங்கு - ஓரம். அம்குறை - அறுபட்ட உடல்.