பக்கம் எண் :


இராவண காவியம் 515

   
         31.  புகலருந் தம்பி தன்னைப் புகழ்ந்துபா ராட்டி ராமன்
             அகமகிழ் வுற்றா னந்தோ வருந்தமிழ்ச் செல்வன் றன்னைத்
             தகவிலேங் கொன்றே மென்று தமிழர்க ளெல்லா மாய்ந்த
             மகன்றனைச் சுற்றிப் பூசல் மயக்கமுற் றழுங்கி னாரே.
 
12. கையறுநிலைப் படலம்
 
கலி விருத்தம்
 
         1.   சென்ற மைந்தன் செருவிற் பகைவரை
             வென்று வாகை மிலைந்து கதிர்மணிக்
             குன்று போலக் குலுங்கி வருகுவா
             னென்று மன்னவ னெண்ணி யிருக்கையில்.

         2.   ஆய காலை யடையலர் தங்களாற்
             சேயி றந்தவச் செய்தி யுரைத்திடக்
             கோயில் வாயில் குறுகிக் குளிர்தமிழ்த்
             தூய வன்றனைத் தூதர் வணங்கியே.

         3.   கல்லின் பாவைகண் ணீர்விடுங் காட்சியைப்
             புல்லி வாய்புல ரக்கொடு போந்ததைச்
             சொல்ல நாவெழ வில்லைத் தொழுதகை
             இல்லை கீழுற வேக்கற்று நின்றனர்.

         4.   உற்ற தென்ன வுரைமி னெனவவர்
             கொற்ற வாநங் குலமகன் றெவ்வரை
             வெற்றி கண்டந்த வில்லவன் றம்பியால்
             இற்றை வேளையின் றாயின னென்னுமுன்.

         5.   ஆவெ னாவிழுந் தாவி கலங்கினன்
             மேவி யேயுணர் விம்மி யெழுந்தனன்
             ஓவி லாதுகண் ணூற்றிருந் தோடவே
             கூவி னான்றிருக் கோயில் குமுறவே.

         6.   பின்னும் பின்னும் பெருங்கிடை வீழ்ந்துவீழ்ந்
             தன்ன கோயி லணிநில மம்மியா
             இன்ன னாய விறைவன் குழலியா
             முன்னும் பின்னு முனைந்து புரண்டனன்.
-------------------------------------------------------------------------------------------
         31. பூசல் மயக்கம் - கூடியழுதல். கையறுநிலை - கழிந்தோர்க்கு ஒழிந்தோர் வருந்துதல். 3. ஏக்கற்று - வருத்தத்தோடசைவற்று. 6. அன்ன - அந்த. இன்னன் - துன்புறுபவன்.