பக்கம் எண் :


இராவண காவியம் 553

   
       80. அம்முறை யேயான் என்குல முன்னோர்
               அரசியல் முறையினி னின்றும்
          இம்மியுந் தவறா தென்குலப் பெரியோர்க்
               கிடர்விளை கொடியரை யொறுத்துக்
          கம்மென வினிது கமழ்தரு நறுமென்
               கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்ப்
          பொம்மெனப் பொலிநன் னறுநுதல் முறிமெய்ப்
               பொலந்தொடி செய்ம்மன செய்தேன்.

       81. மனைவியை யெடுத்துச் சென்றவன் காலில்
               மானமோ டாண்மையை விடுத்துப்
          பனையென விழலை யென்குநை யதுதான்
               பகலவன் குலத்தினர்க் கில்லை
          புனையிழை நடந்து போனதை விடுத்தென்
               புடையமர்ந் திடுகதில் நாளைக்
          கனைகுரல் முரசம் முழங்குநன் முன்றிற்
               கடிநக ரயோத்திநாம் செல்வோம்.
 
அறுசீர் விருத்தம்
 
       82. என்றின கொலைவில் ராமன் எதிருரை யியம்பிச் செய்த
          தன்றிற மதனோ டான்ற தமிழிறை மகனை வென்ற
          வென்றியை நினைத்து நெஞ்சம் விம்முத லுற்றுப் பின்னர்
          நின்றன கடிதிற் செய்ய நெடிதுதன் னினைவிற் கொண்டான்.
15. ஒப்பந்தப் படலம்
 
கலித்துறை
 
       1.  கொடிய பாவியுந் தமிழர்தம் பேரிறை குலத்தை
          வடவ ராமனால் ஒழித்தவவ் வாற்றினை வகுத்தாம்
          அடிமை யாகியே யாரியர்க் கருந்தமி ழகத்தை
          உடைமை யாக்கிய வொப்பந்த மினைத்தென வுரைப்பாம்.

       2.  பாளை யாகிய பீடணன் வேண்டிய படியே
          மீளி யாகிய வடவனும் விறன்மிகு மெய்காப்
          பாளர் சூழ்தர விலங்கையி னணியினைப் பார்த்து
          நாளு லந்தவன் பெருமையை நினைந்துட னைந்தான்.
---------------------------------------------------------------------------------------
2. மீளி - கொலைஞன். உலந்த - கெட்ட