பக்கம் எண் :


562புலவர் குழந்தை

   
                17. ஊர்பழி படலம்
 
         1.  அடிமையாய் வடவ ரான வாரியர்க் கிலங்கை தன்னில்
            முடிபுனைந் தரச னான முதன்மையாற் றமிழர் வாழுங்
            கொடியணி மாட நீடுங் குருமணித் தெருவந் தோறும்
            மடியினில் நெருப்புப் போன்றான் வலம்பர வெண்ணி னானே.

         2.  எண்ணிய வெண்ணந் தன்னை யெவரிடஞ் சொல்வான் பாவம்
            அண்ணனோ தம்பி யோசிற் றப்பனோ மாம னோகூட்
            டுண்ணியே கிளைகள் போல வுடன்வரு சுற்ற மோவுட்
            கண்ணிய வின்ப துன்பங் கழறிடு நண்போ வில்லான்.

         3.  உற்றதா லுறுவ தாராய்ந் துரைத்திடு மமைச்சோ வன்றி
            அற்றம்பார்த் தெளிய கூறு மறிவரோ வற்றங் காணும்
            ஒற்றரோ வறிவு மாண்டு முறுபயிற் சியுமீக் கூர்ந்த
            கற்றரோ காலங் கூறுங் கணியரோ வருகி லாதான்.

         4.  அருந்தமிழ்க் கடலை நண்ணி யகம்புறப் புனலை மாந்தி
            அருந்தமி ழவர்க ளுள்ள மாகிய பைங்கூ ழோங்கப்
            பொருந்தவே செய்யுள் மாரி பொழிந்துநா டோறு மாக்கந்
            தருந்தமிழ்ப் பெரியா ரான சான்றவ ருறவோ வில்லான்.

         5.  மற்றுமா மஞ்சு துஞ்சு மதிலணி யிலங்கை மூதூர்
            முற்றுமே சுற்றி னாலும் முந்திரி யிரக்கங் காட்டும்
            சுற்றமோ துணையா வாரோ தோழரோ விலைமென் கூந்தற்
            சிற்றிடை யார்க ளோடு சிறார்களும் வெறுத்தா ரம்மா.

         6.  பழந்தமிழ் மறவர் கொற்றப் படைகளை யெறிந்து விட்டுக்
            குழைந்தநெஞ் சுடைய ராகிக் கோமகன் றன்னைப் போரில்
            இழந்ததை யெண்ணி யெண்ணி யிரங்கினா ரன்றி யொன்றும்
            விழைந்திலர் படிறன் பேரை விளம்பவும் வெறுப்புற் றாரே.

         7.  பூக்கிடைச் செங்கா லன்னம் பொருந்திய வினத்தி னீங்கிக்
            காக்கையை யுறவு கொண்ட காதைபோற் கண்ணி லாதான்
            மாக்கொலை கார ரான வடவரை யுறவு கொண்டு
            தாய்க்குலந் தன்னி னீங்கித் தனிமைய னானா னம்மா.

         8.  ஊரணி காண வேண்டி னூருள தமிழ மக்கள்
            யாருமே துணையி லாதா னென்செய்வா னொருவன் பாவம்
            ஆரிய மறவர் தம்மை யடைந்துதான் மேற்கொண் டுள்ள
            காரிய மினைய தென்று கழறினான் மான மில்லான்.