இப் பதிப்புப் பற்றி உலக மகா காப்பியங்களுள் தலை சிறந்து விளங்கும் கம்ப நாடனுடைய இராமகாதை ஆறு காண்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளது. மர்ரே அண்டு கம்பெனியாரின் அதிபராகிய திரு. எஸ். இராஜம் அவர்கள் இதனைப் பதிப்பிக்க வேண்டும் என்று நினைத்த பொழுது சொற்களைப் பிரித்துப் பாடல்களைக் கொடுத்தால் பலரும் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று கருதினார். அவ்வாறே 1958இல் வெளியிட்டார்கள். இதற்கு வலுவான் எதிர்ப்பு இருந்தபோதிலும் அவற்றுக்கெல்லாம் கவலைப்படாமல் அவர் சொற்களைப் பிரித்தே பாடல்களை அச்சிட்டார். அதனால், பாடல்களைப் படிக்கின்றவர்கள் 50 சதவீகிதம் உரையினுடைய துணை இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது என்பது உண்மைதான். பின்னர் மர்ரே அண்டு கம்பெனியாரின் கம்பராமாயணப் பதிப்பைப் பெரும்பாலும் அடியொற்றி, சிற்சில மாறுதல்களை மட்டும் செய்து சென்னைக் கம்பன் கழகத்தார் 1976இல் வெளியிட்டனர். இன்று கோவைக் கம்பன் அறநிலை வாயிலாய் வெளிவருகிற இப்பதிப்பு மர்ரே அண்டு கம்பெனியார் மேற்கொண்ட பாடல் முறையையும், ஓரளவு (வேண்டுமான இடத்தில்) சென்னைக் கம்பன் கழகத்தார் மாற்றிய சில பகுதிகளையும், சில பகுதிகளில் புதிய பாட பேதங்களையும் கொண்டு வெளிவருகிறது. மேற்சொன்ன இரு வெளியீடுகளிலும் பதிப்பாசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த அனுபவத்தைக் கொண்டு இப்பதிப்பில் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டோம். பலர் சேர்ந்து உரை எழுதுவதில் உள்ள பிரச்சினைகள், அவை எவ்வாறு தீர்க்கப்பெற்றன என்பன பற்றி டாக்டர் மா.ரா.போ. குருசாமி அவர்கள் தம் “ஒரு தெய்வத் திருப்பணி” பகுதியில் எழுதியுள்ளார்கள். |