பால காண்டம் - முன்னுரை பேரா. அ.ச. ஞானசம்பந்தன் உலக மகா காப்பியங்களுள் தலைசிறந்து விளங்கும் கம்பநாடனுடைய இராமகாதை ஆறு காண்டங்களாக வகுக்கப் பெற்றுள்ளது. முதல் காண்டம் பால காண்டம் எனப் பெயர் பெறும். வால்மீகி முனிவரின் இராமாயணத்தைப் பெரும்பாலும் அடியொற்றி, அதேநேரத்தில் வேண்டுமான இடங்களில் மாற்றம், திருத்தம் முதலிய செய்து கம்பன் தனக்கேயுரிய முறையில் இராமாயணத்தைப் படைத்துள்ளான் என்பதைப் பலரும் அறிவர். வால்மீகியினுடைய பால காண்டத்தைப் பொறுத்தமட்டில் அது அவர் இயற்றியதுதானா அல்லதா என்ற ஐயப்பாடு இன்றளவும் இருந்து வருகிறது.. ஆனால், கம்பனைப் பொறுத்த மட்டில் அத்தகைய பிரச்சனை ஒன்றும் இல்லை. பால காண்டம் அவனுடையதுதான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதே நேரத்தில், மிகச் சிறந்த காப்பியமாக இருந்தாலும், இராம காதை நாடு முழுவதும் பரவியிருந்த காரணத்தாலும், பௌராணிகர்கள் இராமாயணத்தை அதிகம் பேசுவதற்கு எடுத்துக் கொண்ட காரணத்தலும் கம்பனுடைய இராமாயணத்திலும் சில பிரச்சனைகள் தோன்றலாயின. தனித்தனியே பல்வேறு இடங்களில் இருந்து பிரவசனம் செய்கின்றவர்கள் தங்களுக்குத் தேவையான பகுதிகளைப் புதியனவாகப் பாடிச் சேர்த்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆகவே, இடைச்செறுகல்களுக்குப் பஞ்சமேயில்லை. பால காண்டத்திலும்கூட இடைச்செறுகல்கள் பல உண்டு. அவற்றை நன்கு ஆராய்ந்து சிலவற்றை ‘மிகைப்பாடல்கள்’ என்று பின்னே கொடுத்திருக்கிறார்கள், என்றாலும் பல படலங்களில் உள்ள சில பாடல்கள் கம்பனுடையனவா என்று ஐயப்படக்கூடிய நிலையில் உள்ளன. இவ் ஐயப்பாடு இன்னும் நீங்கவில்லை என்பது ஒருபுறம். (சான்று - திரு அவதாரப் படலம் 6 முதல் 28 வரை) இத்தகைய பாடல்கள் வாட்குறி இட்டுக் காட்டியுள்ளோம். பாலகாண்டம் பாயிரம் என்ற பொதுத்தன்மையுடைய பகுதி போக, ஆற்றுப்படலத்தில் தொடங்கிப் பரசுராமப்படலம் ஈறாக 23 படலங்களாக வகுக்கப்பெற்றுள்ளது. |